Last Updated : 16 Sep, 2021 03:12 AM

 

Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM

உரிய விலை கிடைக்காததால் கிருஷ்ணகிரியில் தோட்டங்களில் அழுகி வீணாகும் தக்காளி: கிலோவுக்கு ரூ.3 கிடைப்பதாக விவசாயிகள் வேதனை

உரிய விலை கிடைக்காததால், தக்காளியை பறிக்காமல் விவசாயிகள் செடிகளில் விட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி அருகே ஒரு தோட்டத்தில் பழுத்து வீணாகும் தக்காளிப்பழம்.

கிருஷ்ணகிரி

தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளதால் அவை அழுகி வீணாகிறது. மேலும், கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.3 கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி மேற்கொள்கின்றனர்.

அதிக அளவில் தக்காளி சாகுபடி

குறிப்பாக கிருஷ்ணகிரி, ஆலப்பட்டி, ராயக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளியை விவசாயிகள் ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட், கிருஷ்ணகிரி, ஓசூர் உழவர் சந்தை, ஓசூர் பத்தலப்பள்ளி சந்தை உள்ளிட்ட இடங்களுக்கு எடுத்துச் சென்று ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

விவசாயிகளிடமிருந்து தக்காளியை கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

ஏற்ற இறக்கத்தில் விலை

ஆண்டு முழுவதும் தக்காளி விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. நிகழாண்டில் தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கிருஷ்ணகிரி அடுத்த தின்னகழனி, மலைசந்து, பெல்லம்பள்ளி, பாலகுறி, மாதேப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி பயிர் பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் தக்காளிப் பழங் களை அறுவடை செய்யாமல் விட்டுள்ளனர். இதனால், அவை செடிகளில் அழுகி கீழே விழுந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கூலி கூட கிடைப்பதில்லை

இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:

தற்போது சந்தையில் தக்காளி கிலோ ரூ.7-க்கு விற்பனையாகிறது. மொத்த வியாபாரிகள் எங்களிடம் ரூ.3-க்கு கொள் முதல் செய்கின்றனர். இது எங்களுக்கு அறுவடை கூலி கூட கிடைப்பதில்லை. நீண்ட நாட்களாகவே தக்காளி விலை சரிந்தே உள்ளது.இதன் காரணமாகவே தற்போது செடிகளில் உள்ள தக்காளிப் பழங்களை பறிக்காமல் அப்படியே விட்டுள்ளோம். இதனால், பழங்கள் அழுகி வீணாகிறது. ஒரு சிலர் தோட்டத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.

சிரமத்தை குறைக்க வேண்டும்

எங்களுக்கு தெரிந்த தொழில் விவசாயம் மட்டும் என்பதால் வேறு தொழிலுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். எங்களது சிரமங்களை குறைக்கும் வகையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவும், மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கவும் தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x