Published : 16 Jun 2014 08:48 AM
Last Updated : 16 Jun 2014 08:48 AM

சென்னை அருகே 100 ஏக்கரில் நிதி நகரம் அமைக்க அரசு திட்டம்: 30 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு

சென்னை அருகே 100 ஏக்கர் பரப்பளவில் நிதி நகரத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. நிதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் அமைவதை ஊக்குவிக்கும் வகையில் அமையவுள்ள இந்த திட்டத்தால் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கடந்த திமுக ஆட்சியில் சென்னை சோழிங்கநல்லூரில் நிதி நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த நிதி நகரத்தில் சர்வதேச தரத்திலான வசதிகள் செய்யப்பட்டு, நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைக்கப்படுவதற்கு வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்காக 2009-ல் சோழிங்கநல்லூர் மற்றும் பெரும்பாக்கத்துக்கு இடைப்பட்ட பகுதியில் 180 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அத்திட்டத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் அமல்படுத்த அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டார். ஆனால், என்ன காரணத்தினாலோ திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், அதுபோன்ற ஒரு திட்டத்தை சென்னையில் அமல்படுத்தலாமா என்று தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்காக, தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் அளவிலான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடந்துள்ளது.

கடந்த 9-ம் தேதி டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மும்பையை போல் சென்னைக்கு சர்வதேச நிதி நகர அந்தஸ்து தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நிதி நகர அந்தஸ்து தரப்பட்டால், பெரும்பாலான சர்வதேச நிறுவனங்கள் தங்களது கிளைகளை இங்கு அமைக்க ஆர்வத்துடன் முன்வருவார்கள் என்பதே இதற்குக் காரணம்.

இதுதொடர்பாக தலைமைச் செயலக வட்டாரங்கள் ‘தி இந்து’விடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, உற்பத்தித் துறையில் சிறந்து விளங்குகிறது. ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் சென்னையில் கிளைகளை அமைத்தபிறகு, சர்வதேச அரங்கில் ஆட்டோமொபைல் தொழிலில் முக்கிய மையமாக சென்னை உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் நிதி மற்றும் வங்கித் துறைகள் தொடர்பான நிறுவனங்கள் அமைவதை ஊக்குவிக்கும் வகையில் தனியாக ஒரு தொழிற்பேட்டையை அமைக்க தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

அதில் முக்கியமாக ‘பேக் ஆஃபீஸ்’ (ஒரு நிறுவனத்தின் நிதி தொடர்பான சேவைகளை செய்து தரும் பணியை வேறு நிறுவனத்திடம் ஒப்படைப்பது) தொடர்பான அதிக அலுவலகங்கள் இங்கு அமைய நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து செயல்படும் பல பெரும் நிறுவனங்கள், சென்னையில் ஆர்வத்துடன் தங்களது ‘பேக் ஆஃபீஸை’ தொடங்க முன்வரும். சென்னையில் சிறப்பான கட்டமைப்பு வசதிகள், திறன்மிக்க அலுவலர்கள் உள்ளதால் இது எளிதில் சாத்தியமாகும். இதன்மூலம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஒரகடம் பகுதியில்..

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டியுள்ள இடங்களில் பெரிய அளவில் காலியிடங்கள் இல்லை. அதனால் பெரும்புதூர் மற்றும் ஒரகடம் பகுதிகளில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிறப்புத் திட்டத்தை அமல்படுத்த பரிசீலிக் கப்பட்டு வருகிறது. திட்டத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதுபற்றிய விளக்கமான திட்டத் தொகுப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதை முதல்வரிடம் விரைவில் சமர்ப்பிப்போம். அவர் பார்த்து, ஒப்புதல் கொடுத்தபின் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x