Published : 15 Sep 2021 08:43 PM
Last Updated : 15 Sep 2021 08:43 PM
கலைஞர் முதல்வரான பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு பெற்ற புகழை எல்லாம், ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களிலேயே பெற்றிருக்கிறார் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, திமுகவைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழாவில், விருதுகளை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார். விழாவுக்கு பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''அண்ணாவின் இதயத்தைக் கேட்டுப் பெற்றார் கலைஞர். ஆனால், கலைஞரின் இதயத்தைக் கேட்காமலேயே எடுத்து வைத்துக் கொண்டார் ஸ்டாலின். அதனால்தான் நாடே போற்றும் வகையில், பாராட்டுக்குரிய ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார். என்றைக்காவது கேரளத் தொலைக்காட்சியில் நம்முடைய முதல்வரைப் புகழ்ந்து பாடும் பாட்டைப் பார்த்திருக்கிறீர்களா? ஆந்திராவில், மேற்கு வங்கத்தில், அசாமில், டெல்லியில் என இந்தியாவில் எட்டுத் திக்கிலும் ஸ்டாலின் புகழ் பாடப்படுகிறது.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். அது வரலாறு. மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டினார். ஆனாலும் காந்தளூர்ச் சாலை வரையில்தான் அவரால் வெற்றி பெற முடிந்தது. ஆனால், அவரது மகனாகப் பிறந்த ராஜேந்திர சோழன் கங்கையை வென்றார். மலேசியாவில் உள்ள கடாரத்தில் வெற்றிக் கொடி நாட்டினார். எட்டுத்திக்கிலும் வெற்றி பெற்றார். அருகே உள்ள காஞ்சிபுரத்தில் மகேந்திர பல்லவன் பல்லவ நாட்டை மட்டுமே ஆண்டார். ஆனால், அவருடைய மகன் நரசிம்ம பல்லவன் வாதாபி வரையில் படையெடுத்து வென்றார்.
அந்த வகையில் கலைஞர் முதல்வரான பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு பெற்ற புகழை எல்லாம் ஸ்டாலின் 100 நாட்களில் பெற்றிருக்கிறார். ஆட்சியைத் திறம்பட நடத்துபவர், கட்சியையும் கட்டிக் காப்பாற்றுகிறார். கட்சி இருந்தால்தான் ஆட்சி. ஆட்சி போகும், வரும். ஆனால் இயக்கம் முக்கியம்.
இந்த இயக்கத்தைத் தலைவர் கலைஞர் வழியில் இம்மி அளவும் பிசகாமல் நடத்திக்கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''
இவ்வாறு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT