Published : 15 Sep 2021 06:47 PM
Last Updated : 15 Sep 2021 06:47 PM
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதில்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் கலைச்செல்வி. வாகனப் பதிவுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இவரைக் கைது செய்தனர்.
ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கலைச்செல்வி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடுகையில், ''லஞ்சம் வாங்கியதாக மனுதாரரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால் அவர் கைது செய்யப்படும்போது அவரிடம் எந்தப் பணமும் இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, ''அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்குக் கொஞ்சம்கூட கூச்சப்படுவதில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது. ஆண்டுக்கு நூறு வழக்குகள் எனப் பதிவாகின்றன. அந்த வழக்குகளையும் முறையாக விசாரிப்பதில்லை. ஒருவரைக் கைது செய்தால் அவரது வீடு, அலுவலகங்களில் சோதனையிட வேண்டும்.
அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளனரா? என்றும் ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு லஞ்ச ஒழிப்பு போலீஸார் செயல்படுவதில்லை. இந்த வழக்கில் மனுதாரருக்கு தற்போது ஜாமீன் வழங்க முடியாது'' என்று கூறி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT