Published : 15 Sep 2021 04:11 PM
Last Updated : 15 Sep 2021 04:11 PM

எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை: அன்புமணி

அன்புமணி: கோப்புப்படம்

சென்னை

நீட் அச்சத்தால் தற்கொலை வேண்டாம் என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (செப். 15) வெளியிட்ட அறிக்கை:

"ராணிப்பேட்டை தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவி நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காது என்ற அச்சத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியைக் கேட்டு பெரும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பாமகவின் சார்பில் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வு அச்சத்தால் மேட்டூர் கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ், அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கனிமொழி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் சோகத்திலிருந்து வெளிவருவதற்கு முன்பே சௌந்தர்யா தற்கொலை செய்து கொண்டிருப்பது நிலைகுலையச் செய்துள்ளது. தமிழக மாணவர்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்வதெல்லாம் நீட்டுக்கு அஞ்சி தயவுசெய்து தற்கொலை செய்து கொள்ளாதீர் என்பதைத்தான்.

நீட் தேர்வை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அது கண்டிப்பாக அகற்றப்பட்டாக வேண்டும். அதே நேரத்தில், எந்த ஒரு சூழலையும் எதிர்த்துப் போராடுவதற்கு மாணவர் சமுதாயம் தயாராக இருக்க வேண்டும். நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்துகொள்வது எந்த வகையிலும் பிரச்சினைக்குத் தீர்வாகாது.

ஒருமுறை நீட்டில் தேர்ச்சி பெற முடியவில்லை என்றால் அடுத்த முறை முயன்று வெற்றி பெற வேண்டும். அதேபோல், இனியும் நீட் தேர்வால் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். அதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு சட்டத்துக்கு புதிய ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று அந்தச் சட்டம் மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பப்படுவதையும், அச்சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் குறிப்பிட்ட கால வரையறைக்குள் கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்".

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x