Published : 15 Sep 2021 02:40 PM
Last Updated : 15 Sep 2021 02:40 PM
தனியார் நிறுவனங்கள், மக்கள் கட்டக்கூடிய ஜிஎஸ்டி வரியை அரசுக்குச் செலுத்தாமல் ஏமாற்றுகின்றன என்று வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மந்தையம்மன் கோயில் திடல் அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு நேரில் சென்று, அங்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''மதுரை மாநகராட்சியில் மட்டும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 23,424 பேருக்கு மருத்துவ சேவை செய்யப்பட்டுள்ளது. 40 ஆயிரம் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. அரசு 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், அந்த இலக்கைத் தாண்டி 28 லட்சத்து 92 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நினைத்ததை விட ஒருமடங்கு அதிகமாகத் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கரோனா மூன்றாவது அலை வந்துவிடுமோ என்ற அச்சம் மக்களிடம் நிலவுகிறது. அந்த அச்சத்தைப் போக்கி தொற்றுப் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நீட் தேர்வைப் பொறுத்தவரையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலே அதை ரத்து செய்ய உறுதி அளித்து இருந்தார். அதற்காகத்தான் தற்போது வரை தமிழக அரசு போராடிக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வதிலும் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. பாஜகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக உள்ளன.
தமிழக வணிக வரித்துறை வரலாற்றிலே எப்போதும் இல்லாத வகையில் 103 ஜவுளிக் கடைகளில் வணிக வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இது தொடரும். தனியார் நிறுவனங்கள் மக்களிடம் வரிப் பணத்தை வாங்கிக் கொண்டு அரசுக்குச் செலுத்தாமல் உள்ளன. தொழில் செய்பவர்கள், பொருள் வாங்குவதற்கும், விற்பதற்கும் வரி கட்ட வேண்டும். ஆனால், மக்கள் கட்டக்கூடிய ஜிஎஸ்டி வரியை அரசுக்குச் செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர்.
அந்த புகாரின் அடிப்படையிலேதான் ஜவுளி நிறுவனங்களில் ஆய்வு நடந்தது. இன்னும் 3 நாட்கள் அந்த ஆய்வு நடக்கும். அதன்பிறகு அதற்கான தீர்வை வணிக வரித்துறை முடிவெடுக்கும். தொழில் செய்பவர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியை, நேர்மையாகவும் முறையாகவும் செலுத்த வேண்டும்''.
இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.
இதேபோல், மதுரை மத்திய சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சிம்மக்கல் தைக்கலால் 3-வது தெருவில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT