Published : 15 Sep 2021 01:25 PM
Last Updated : 15 Sep 2021 01:25 PM
தடுப்பூசி மையங்களிலும், நியாய விலைக் கடைகளிலும், கரோனா பணியாளர் நியமனங்களிலும், காவல்துறையிலும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்த தி.மு.க.வினர், தற்போது தனியாரிடமும் தங்களது அடாவடிச் செயலை மேற்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தடுப்பூசி மையங்களிலும், நியாய விலைக் கடைகளிலும், கரோனா பணியாளர் நியமனங்களிலும், காவல்துறையிலும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்த தி.மு.க.வினர், தற்போது தனியாரிடமும் தங்களது அடாவடிச் செயலை மேற்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல், ஆங்காங்கே சட்டம்- ஒழுங்கைச் சீரழிக்க வழிவகுக்கும்.
தஞ்சாவூர், சூரக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர், மன்னார்குடி- பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருவதாகவும், இந்தக் கடைக்கு மன்னார்குடி நகர தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் சுதாகர், விவசாயத் தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் பாண்டவர், மாணவரணி நகர துணைச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட எட்டு பேர் சென்று தகராறில் ஈடுபட்டதாகவும், கடையில் இருந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளைப் பேசி பலாத்காரம் செய்ததாகவும், இதைத் தட்டிக் கேட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை, தி.மு.க.வினர் கடுமையாகத் தாக்கி, கடையில் இருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதாகவும், இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் உட்பட நான்கு ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் படுகாயம் அடைந்ததாகவும், இதனையறிந்த கிராம மக்கள் தி.மு.க.வினரை மடக்கிப் பிடித்து, அவர்களை உதைத்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து, ஆறு தி.மு.க. பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், தி.மு.க. நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் சூரக்கோட்டையைச் சேர்ந்த ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்கு மூலக் காரணமான எட்டு தி.மு.க. பிரமுகர்களில், இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டதாகவும், கிராம மக்கள் தற்காப்புத் தாக்குதல் நடத்தியதால் காயமுற்ற ஆறு பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தப்பியோடிய இருவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆளும் கட்சியில் உள்ளதன் காரணமாக, வழக்கை நீர்த்துப் போகச் செய்து, மீண்டும் தாக்குதல் நடவடிக்கைகளில் தி.மு.க.வினர் ஈடுபடுவார்களோ என்ற அச்சமும், பதற்றமும் அப்பகுதி மக்கள் மத்தியில் நிலவுகிறது.
எனவே, தமிழ்நாடு முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, சூரக்கோட்டைப் பகுதியில் சட்டம்- ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக் காரணமாக இருந்த அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும், அப்பகுதியில் நிலவும் பதற்றத்தைப் போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’.
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT