Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் 10.30 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடிக்கு வாய்ப்பு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே முதல்சேத்தி கிராமத்தில் சம்பா சாகுபடிக்காக நாற்றங்காலில் விதை விடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயத் தொழிலாளர்கள்.

திருச்சி

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் 10.30 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடிக்கு வாய்ப்பு இருப்பதாக வேளாண்மைத் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு நடப்பு ஆண்டு ஆண்டு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிக அளவாக 4.31 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது முன்பட்ட குறுவை நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதியில் முழுவீச்சில் அறுவடைப் பணிகள் நடைபெறும் வாய்ப்புள்ளது.

சம்பா, தாளடி சாகுபடி

காவிரி டெல்டா மாவட்டங்க ளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை பருவ சாகுபடியை விட அதிக பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வர். இந்த ஆண்டு இந்த மாவட்டங்களில் ஏறத்தாழ 10.30 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடிக்கு வேளாண்மைத்துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பரப்பு 3.46 லட்சம் ஏக்கர். இதில் இதுவரை 15 ஆயிரம் ஏக்கரில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ஏக்கரில் நாற்றுகள் மூலம் நடவுப் பணிகள் முடிந்துள்ளன.

திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், வழக்கமாக சம்பா, தாளடி பருவத்தில் 3.68 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு இதுவரை நேரடி விதைப்பாக 85 ஆயிரம் ஏக்கரும், நாற்றுகள் மூலம் 47 ஆயிரம் ஏக்கரும் நடவு செய்யப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மற்றும் மயி லாடுதுறை மாவட்டங்களில் வழக்கமாக 3.16 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பருவத்தில் நெல் சாகுபடி நடைபெறும். இந்த ஆண்டு இதுவரை 79 ஆயிரம் ஏக்கரில் நேரடி விதைப்பு உட்பட 1.54 லட்சம் ஏக்கரில் நடவுப் பணிகள் முடிந்துள்ளன.

சம்பா பருவத்துக்கு தேவையான நாற்றுகள் விடப்பட்டு, நடவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து தேவை யான அளவுக்கு தண்ணீர் திறக்கப் பட்டு வருவதால் இந்த ஆண்டு சாகுபடி பணிகள் தொய்வின்றி நடைபெறும் என வேளாண்மைத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பா சாகுபடிக்கு உகந்த நீண்ட மற்றும் மத்திய கால ரகங்களான சிஆர்.1009 சப் 1, சொர்னா சப், சி.ஆர்.1009, கோ.ஆர். 50, பிபிடி 5204, ஆடுதுறை 51, ஆடுதுறை 38, ஆடுதுறை 39 உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.

சம்பா பருவத்தில் நீண்டகால நெல் ரகங்கள் செப்.30-ம் தேதிக் குள்ளும், மத்திய கால ரகங்கள் அக்.31-ம் தேதிக்குள்ளும் நடவு செய்யப்பட்டு விடும் என வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x