Published : 14 Sep 2021 05:51 PM
Last Updated : 14 Sep 2021 05:51 PM
சட்டப்பேரவைக்குள் நீட் தேர்வுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துவிட்டு வெளியில் அதிமுக நடிக்கிறது எனத் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னோடி நிர்வாகியான மலைச்சாமி நினைவு நாளுக்கு மரியாதை செலுத்த அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து மதுரை வந்தார்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
’’தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கான மசோதா சட்ட முன்வடிவு இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய வகையிலான துணிச்சலான முடிவு. இம்மசோதாவைக் கொண்டுவந்த தமிழக முதல்வருக்குப் பாராட்டுகள். மன அழுத்தத்திற்கு ஆளான மாணவி கனிமொழி என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது அதிர்ச்சி, வேதனை அளிக்கிறது. இந்த ஆண்டு நீட் தேர்வால் இரண்டு இளம் உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளன. மாணவச் செல்வங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடாது என வேண்டுகோள் விடுக்கிறேன்.
மத்திய மோடி அரசு மேலும் இதுபோன்ற உயிர்களைக் காவு கொடுக்காமல் இருந்து, மாணவர்களைக் காப்பாற்றக்கூடிய வகையில் நீட் தேர்வைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
செப்.15ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கங்களுடன் சேர்ந்து பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஊபா போன்ற பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் மனிதச் சங்கிலி அறப் போராட்டம் காரைக்குடியில் நடைபெறும். இப்போராட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன்.
மாநில சுயாட்சி நாளாக அண்ணாவின் பிறந்த நாளை ஆண்டுதோறும் கடைப்பிடிக்கிறோம். பெரியாரின் பிறந்த நாள் அன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, சமூக நீதி நாளுக்கான உறுதிமொழி ஏற்க உள்ளோம். திமுகவின் மசோதாக்கள் அனைத்தும் தீர்மானமாகவே இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அண்ணாமலை, திமுகவிற்கு எதிராகப் பேசுவதாக நினைத்து, தமிழக மக்களுக்கு எதிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி, வாய்ப்புள்ள இடங்களில் எங்களது கட்சியினர் போட்டியிடுவர். நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக நடிக்கிறது. இது அவர்களுடைய இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது’’.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT