Published : 14 Sep 2021 04:59 PM
Last Updated : 14 Sep 2021 04:59 PM
நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கிலோ மீட்டர் அதிகரித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில் நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் பல் மருத்துவர் ஒருவருக்கு, உடல் உறுப்புகள் 90 சதவீதம் செயலற்றுப் போயின. அவருக்கான இழப்பீட்டுத் தொகையாக 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாயில் இருந்து, 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயர்த்தி வழங்க நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
மேலும், அந்தத் தீர்ப்பில், எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லலாம் என்று மத்திய அரசு 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும், இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டுமென உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அதேபோல, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதைக் கட்டாயமாக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சாலை மேம்பாட்டையும், இன்ஜின்களின் செயல்பாட்டை அதிகரிக்கவும் வேகம் அதிகரிக்கப்பட்டதாக, மத்திய அரசு கூறிய விளக்கத்தை ஏற்க மறுத்து, 2018-ம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், 2014-ம் ஆண்டு அறிவிப்பின்படி, வாகனங்களுக்கு 60 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, அதன் அடிப்படையில் புதிய அறிவிப்பை வெளியிடத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT