Published : 14 Sep 2021 12:28 PM
Last Updated : 14 Sep 2021 12:28 PM
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி, திமுக எம்எல்ஏ எழிலன் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 8 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ எழிலன் நடத்திவரும் 'அறம் செய்ய விரும்பு' என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக தொடரப்பட்டுள்ள பொது நல வழக்கில், "கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான விதிமீறலாகும்.
இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பல்வேறு விதிமீறல்களும் இந்த காலக்கட்டத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டது.
மாநில அரசின் சில அதிகாரங்கள் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1976-ல் மொத்தம் 5 முக்கியமான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை, மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
மாநில அரசுகளின் அனுமதி இன்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல், எமர்ஜென்சி காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இப்படி கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே, தற்போது நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக்கொள்கை போன்ற சட்டங்கள் மத்திய அரசு மூலம் அமலுக்கு வந்துள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ எழிலன் சார்பாக, 'அறம் செய்ய விரும்பு' என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இன்று (செப். 14) விசாரணைக்கு வந்தபோது, தொண்டு நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார்.
பின்னர் இந்த வழக்கில் தமிழக அரசை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் எட்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT