Published : 14 Sep 2021 12:34 PM
Last Updated : 14 Sep 2021 12:34 PM
சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நீட் தேர்விற்கு எதிரான மசோதாவிற்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்று தமிழகத்துக்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மார்க் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். இந்நிலையில்,மாணவி கனிமொழி நீட் தேர்வை கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ளார். இந்நிலையில் நீட் தேர்வு கடினமாக இருந்ததால் தேர்வை சரியாக எழுதவில்லை என தந்தையிடம் கூறி மன உளைச்சலில் இருந்த மகளை தந்தை தேற்றியுள்ளார்.
எனினும் மருத்துவ கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேற்று தனிமையில் வீட்டில் இருந்த கனிமொழி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாணவியின் உடலுக்கு இன்று (செப் 14) அஞ்சலி செலுத்திய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்சிவசங்கர், நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நேற்று சட்டப்பேரவையில், தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற செயல்களை மாணவ, மாணவிகள் ஈடுபடாமல் மனதை திடப்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இதற்காக மனதளவில் மாணவ, மாணவிகள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார்.
இதனிடையே மாணவியின் உடல் வருவாய்த்துறையினர், காவல்துறையினர் முன்னிலையில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT