Published : 13 Sep 2021 05:40 PM
Last Updated : 13 Sep 2021 05:40 PM
சூரிய ஒளி மின் உற்பத்தியில் நாம் உலக அளவில் 5-வது இடத்தில் உள்ளோம் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் 2.4 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் இன்று (செப்.13) நடைபெற்றது.
விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டு சூரிய மின் உற்பத்தி நிலையத்தைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
‘‘பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச அரசுக் குழு வெளியிட்டுள்ள காலநிலை மாற்றம் குறித்த அறிக்கையில், உலகளாவிய வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.
அது எதிர்கால நிகழ்வல்ல. ஏற்கெனவே அதனை நாம் அனுபவித்து வருகிறோம். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சமீப காலங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி மிக முக்கியமாக விளங்குகிறது.
இதுபோன்ற சமயத்தில், கல்வி நிறுவனங்களில் நாட்டிலேயே மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டம் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ளது வரவேற்கக் கூடியதாகும். தேசிய சூரிய எரிசக்தி நிறுவனம் நமது நாட்டின் 3 சதவீத வெற்று நிலங்களில் சூரிய ஒளி மின்தகடுகளை நிறுவுவதன் மூலம் 748 ஜிகாவாட் சூரிய ஆற்றல் கிடைக்கும் என மதிப்பிட்டுள்ளது.
இது குக்கிராமங்களுக்கு மின்சாரத்தை வழங்கவும், எரிசக்தி தன்னிறைவை அடையவும் வழிவகுக்கும். இந்தியா இதுவரை 40 ஜிகாவாட் அளவுக்கான சூரிய மின் உற்பத்தித் திட்டங்களை நிறுவியுள்ளது. சூரிய ஒளி மின் உற்பத்தியில் தற்போது நாம் உலக அளவில் 5-வது இடத்தில் உள்ளோம். விரைவில் உலகில் முன்னிலையில் வருவோம்.
உள்நாட்டில் சூரிய ஒளி சேமிப்புக் கலன்கள், சூரிய ஒளி கட்டமைப்பு தயாரிப்பில் பற்றாக்குறை நிலவுகிறது. இவற்றை இங்குள்ள நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இவற்றை ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும்.
இதற்கு மானியம் வழங்கி, சிறு குறு உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மாநிலங்கள் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதேபோல, சூரிய ஒளி மின் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் பயிற்சி பெற்ற நபர்கள் குறைவாக உள்ளனர். இதனைச் சரிசெய்ய வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஆய்வுகளை மேம்படுத்த வேண்டும். மாணவர்களைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உலோக அறிவியலில் திட்டங்களைச் சமர்ப்பிக்கவும், பயிற்சி பெறவும் ஊக்குவிக்க வேண்டும். இது உள்நாட்டு சூரிய ஒளி மின் உற்பத்தித் தொழிலில் புதிய கண்டுபிடிப்புகளையும், முன்னேற்றத்தையும் மேம்படுத்தும்.
தெலங்கானா மாநிலம் ராமகுண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 மெகாவாட் நீரில் மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டம் போல மற்ற இடங்களிலும் அமைக்க வேண்டும். நிலையான, சாத்தியமான மேல்தளங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தியையும் ஊக்குவிக்கவும் வேண்டும்’’.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பேசுகையில், ‘‘கரோனா காலத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கோவிட் கேர் சென்டர் ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டேன். அதன்படி அங்கு கோவிட் கேர் சென்டர் ஏற்படுத்தப்பட்டு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலங்கானா ராஜ்பவன், ஊழியர்கள் 400 பேர் தங்கக்கூடிய குடியிருப்புகள் என அனைத்தும் முழுக்க முழுக்க சூரிய ஒளி மின் உற்பத்தியில்தான் இயங்குகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மகப்பேறு முதுநிலை மருத்துவம் படித்தபோது குஜராத் சென்றிருந்தேன்.
அப்போதே அங்குள்ள ஏடிஎம் மையம் ஒன்று சூரிய ஒளி மின் உற்பத்தியில் இயங்குவதைக் கண்டு வியப்படைந்தேன். இதுதான் நமது நாட்டின் வளர்ச்சி. இதைத்தான் பிரதமர் மோடி முன்னோடி திட்டமாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது’’ எனப் பேசினார்.
முதல்வர் ரங்கசாமி பேசும்போது, ‘‘ஜிப்மரில் 1.5 மெகாவாட், பல்கலைக்கழகத்தில் 2.4 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து மின் தேவையைப் பூர்த்தி செய்வது பாராட்டுக்குரிய ஒன்று. நமக்கு மின் தேவை அதிகம் உள்ளது. சூரிய மின் உற்பத்தி மூலம் மின் தேவையைப் பூர்த்தி செய்வது மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.
இதேபோன்று அரசுக் கட்டிடங்கள், காலியாக உள்ள இடங்களில் எல்லாம் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். பொதுமக்கள் மின் உற்பத்தியைப் பெருக்குவதில் மிகுந்த அக்கறையும், கவனத்தையும் செலுத்த வேண்டும்’’ என்றார்.
விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், எம்எல்ஏ கல்யாணசுந்தரம், பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT