Published : 13 Sep 2021 04:45 PM
Last Updated : 13 Sep 2021 04:45 PM
தமிழகத்தில் காவல்துறை ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக.13-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (செப். 13) காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
"காவலர்கள் நலன் பேணுவதில் திமுக அரசு எப்போதும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு முறை ஆட்சியில் அமருகின்றபோதும், காவலர்கள் அனைவரது கவலைகளையும் தீர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம். காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக, 1969ஆம் ஆண்டு முதலாவது காவல்துறை ஆணையம், 1989ஆம் ஆண்டு இரண்டாவது காவல்துறை ஆணையம், 2006ஆம் ஆண்டு மூன்றாவது காவல்துறை ஆணையம் அமைத்து, அந்த ஆணையங்களின் பரிந்துரைகளை நிறைவேற்றியவர்தான் கருணாநிதி.
1971ஆம் ஆண்டு காவல்துறையில் கணினி பிரிவைத் தொடங்கியதும், வீரதீரச் செயல்கள்புரியும் காவலர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கத் தொடங்கியதும் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில்தான். அவரது வழி நின்று, காவலர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை அறிவதற்காக காவல்துறை ஆணையம் விரைவில் அமைக்கப்படும்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT