Published : 13 Sep 2021 04:32 PM
Last Updated : 13 Sep 2021 04:32 PM
கரூர் ஆட்சியர் அலுவலகம் வரும் மாற்றுத்திறனாளிகளை உள்ளேயும் வெளியேயும் அழைத்துச் செல்ல இலவச ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, கால்கள் செயல்படாத மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தத்திலிருந்து கைகளை ஊன்றியபடி ஆட்சியர் அலுவலகம் வந்தார். மேலும், இதுபோல மாற்றுத்திறனாளிகள் பலர் ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிரமப்பட்டு, ஆட்சியர் அலுவலகம் வருகின்றனர்.
இதனைக் கண்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கடந்த வாரம் திங்கள் கிழமை ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகளை அழைத்துவர, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் சக்கர நாற்காலியுடன் ஊழியர் ஒருவரை நியமித்தார்.
மேலும் கடந்த வாரம் நடந்த காணொலி மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் த.பிரபுசங்கர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் மாற்றுத் திறனாளிகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லவும், அவர்கள் செல்லும் இடங்களுக்குக் கொண்டுபோய் விடவும் இலவச ஆட்டோக்களை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, 2 இலவச ஆட்டோக்கள் இன்று (செப்.13-ம் தேதி) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகளை ஆட்சியர் அலுவலகத்தினுள் இறக்கி விட்டனர். மேலும் மனு அளித்துவிட்டுத் திரும்பிய மாற்றுத்திறனாளிகளை ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தம், சுங்க வாயில், கரூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சென்று இறக்கிவிட்டனர்.
இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில் கூறும்போது, ’’வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் ஆட்சியர் அலுவலகம் உள்ளே மற்றும் வெளியே தலா ஒரு ஆட்டோ வீதம் 2 ஆட்டோக்கள் மாற்றுத்திறனாளிகளை இலவசமாக அழைத்துச் செல்வதற்கு நிறுத்தப்படும். ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லவும், அங்கிருந்து ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தம், சுங்கவாயில், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அவர்களை இறக்கிவிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT