Published : 13 Sep 2021 01:27 PM
Last Updated : 13 Sep 2021 01:27 PM
பட்டுப்புழுவியல் படிப்பை நிறுத்தக் கூடாது என்றும், தமிழக முதல்வரும், வேளாண் அமைச்சரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பட்டுப்புழுவியல் பட்டப்படிப்பு தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வரும் பட்டுப்புழுவியல் பட்டப்படிப்பை நிறுத்தி வைப்பதாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்திருப்பதை எதிர்த்துப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். படிக்க வேண்டிய மாணவர்களைப் போராடும் சூழலுக்கு வேளாண்மை பல்கலைக்கழக நிர்வாகம் தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டுப்புழுவியல் பாடத்தில் நான்காண்டு இளநிலை அறிவியல் (BSc - Sericulture) பட்டப்படிப்பு கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக இருந்த இந்தப் பட்டப்படிப்பு பின்னர் 2014ஆம் ஆண்டில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றப்பட்டது.
அங்கு பட்டுப்புழுவியல் படிப்புக்குத் தேவையான பட்டுப்புழு வளர்ப்புக் கூடங்கள், மல்பெரிச் செடி தோட்டம், ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால், பட்டுப்புழுவியல் படிப்புக்கு மாணவர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அப்படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.
மாணவர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ள ஒரு படிப்பை வேளாண் பல்கலைக்கழகம் எந்த அடிப்படையில் தன்னிச்சையாக நிறுத்தியது என்று தெரியவில்லை. இதற்காகப் பல்கலைக்கழகத் தரப்பில் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையாக இல்லை என்பது மட்டுமின்றி; அவை முன்னுக்குப் பின் முரணாகவும் உள்ளன. நிர்வாக வசதிக்காக அடுத்த இரு ஆண்டுகளுக்கு மட்டும் பட்டுப்புழுவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டிருப்பதாக ஒருபுறம் தகவல்களைப் பரப்பும் பல்கலைக்கழக நிர்வாகம், மறுபுறம் பட்டுப்புழுவியல் படிப்புகளைப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை; பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏற்ற சூழல் மேட்டுப்பாளையத்தில் இல்லை என்றும் கூறுகிறது.
பல்கலைக்கழகத்தின் தரப்பில் கூறப்படும் என்ற காரணமும் உண்மையல்ல என்பதுதான் உண்மை. பட்டுப்புழுவியல் படிப்பு கடந்த 7 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வருகிறது; அதற்குத் தேவையான பட்டுப்புழுக்கள் மேட்டுப்பாளையத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இவ்வளவு நாள் பட்டுப்புழு வளர்ப்பில் எந்தச் சிக்கலும் இல்லாத நிலையில், இப்போது திடீரென பட்டுப்புழு வளர்ப்பு மீது பழியைப் போட்டு அதற்கான படிப்புக்கு மூடுவிழா நடத்துவது எந்தவகையிலும் நியாயமல்ல.
அதேபோல், பட்டுப்புழுவியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் தவறாகும். வனவியல் கல்லூரியில் பட்டுப்புழுவியல் படிப்பைப் படித்து முடித்த பலரும் தமிழக அரசின் பட்டு வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகின்றனர். பட்டுப்புழு சார்ந்த தனியார் நிறுவனங்களிலும் பலர் பணியாற்றுகின்றனர். பட்டுப்புழுவியல் படித்த பலருக்கு அடுத்த ஒருசில ஆண்டுகளில் அரசு வேலை கிடைத்துள்ளது. இது வேறு எந்தப் படிப்பிலும் கிடைக்காத வாய்ப்பு ஆகும். அவ்வாறு இருக்கும்போது பட்டுப்புழுவியல் படித்தால் வேலைவாய்ப்பு இல்லை என்று கூறி அப்படிப்பை முடக்குவது மாணவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
தமிழ்நாட்டில் எந்தப் படிப்பும் நிர்வாகக் காரணங்களுக்காக இதுவரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டதில்லை. பட்டுப்புழுவியல் படிப்பை நிறுத்திவைக்க நியாயமான காரணங்கள் இல்லாதபோது, அப்படிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகப் பல்கலைக்கழகம் கூறுவதும் மாணவர்களை முட்டாள்கள் ஆக்கும் செயலாகும். பட்டுப்புழுவியல் படிப்புக்கான பாடத்திட்டத்தில் பட்டுப்புழுவை வளர்ப்பது மட்டுமின்றி, பட்டு நூல் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவை அரசு - தனியார் வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, மிகப்பெரிய அளவில் சுயவேலைவாய்ப்புகளையும் வழங்கக்கூடியவை. இத்தகைய சிறப்புமிக்க பட்டுப்புழுவியல் பட்டப்படிப்பு முடக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
பட்டுப்புழுவியல் படிப்பு முடக்கப்படுவதைக் கண்டித்து வனவியல் கல்லூரியில் அப்படிப்பைப் படித்து வரும் மாணவர்கள் கடந்த 5 நாட்களாக அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் வேளாண் பல்கலைக்கழக நிர்வாகம் நடத்திய பேச்சுகள் தோல்வியடைந்துவிட்டன. அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறையைப் பல்கலைக்கழகம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இது பெரும் சிக்கலாக வெடிப்பதற்கு முன் தீர்வு காணப்பட வேண்டும். தமிழக முதல்வரும், வேளாண் அமைச்சரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பட்டுப்புழுவியல் பட்டப்படிப்பு தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்”.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT