Published : 13 Sep 2021 11:05 AM
Last Updated : 13 Sep 2021 11:05 AM
நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சியாக இருந்தபோதே, திமுக வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், நீட் தேர்வு தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது. அக்குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக. 13-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (செப். 13) நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து தாக்கல் செய்தார்.
அப்போது, "நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக அரசு எதிர்த்து வருகிறது. இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே அதற்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா நிறைவேற்றப்படும் என உறுதியளித்தோம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சிறந்த மருத்துவர்களை தமிழகம் உருவாக்கியுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதுதான் நியாயமான சேர்க்கையாக இருக்கும்" என்றார்.
இதனிடையே, நீட் தேர்வு தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT