Published : 13 Sep 2021 03:14 AM
Last Updated : 13 Sep 2021 03:14 AM
தமிழகத்தில் பணியாற்றிய அனுபவம் என்றும் நெஞ்சைவிட்டு நீங்காது என்று, தனது பிரியாவிடை செய்தியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக ஆளுநராகப் பொறுப்பு வகித்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் ஆளுநராகவும், சண்டீகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் மாற்றப்பட்டுள்ளார். அதேபோல, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பன்வாரிலால் புரோஹித் தமிழக மக்களுக்கு விடுத்துள்ள பிரியாவிடை செய்தியில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் அன்பையும், பாசத்தையும் கண்டேன். இதற்காக தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொருவரின் பொறுமையையும் சோதிக்கும் வகையில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தன என்பது உண்மைதான். ஆனால், அவற்றின் விளைவுகள் அனைத்துத் தரப்பினருக்கும் சாதகமாகவே அமைந்தன.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையில், சட்டப்படியான நிலைப்பாடுகளை மேற்கொண்டேன். சரியான முடிவுகளை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டதுடன், தங்கள் ஒத்துழைப்பையும் நல்கினர். இவையெல்லாம் என்றும் நெஞ்சைவிட்டு நீங்காது.
பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில், கல்வி மேம்பாட்டு நலனைக் கருத்தில்கொண்டு, முக்கிய முடிவுகளை எடுத்தேன்.
தமிழகத்தின் வளமையான கலாச்சாரம், ஆன்மிக, வரலாற்றுப் பாரம்பரியத்தை அறிய ஆளுநர் பொறுப்பு எனக்கு நல்ல வாய்ப்பை வழங்கியது. இவற்றுக்கெல்லாம் நன்றி தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT