Published : 12 Sep 2021 07:27 PM
Last Updated : 12 Sep 2021 07:27 PM
பள்ளிகளில் பாரதியாரின் பாடல்களைக் கற்றுக்கொடுங்கள்; பாரதியைப் பாடுவதன் மூலமாக நாட்டுப்பற்று வளரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டம், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவேந்தல் நடந்தது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, மணிமண்டபத்தில் உள்ள பாரதியாரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் மகாகவி பாரதியாரின் புகைப்பட கண்காட்சி, 75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்ட பிரச்சார வாகனங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு மகாத்மா காந்தி உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் மகாகவி பாரதியார் குறித்த புகைப்பட கண்காட்சி திறந்து வைத்து பார்வையிட்டார். சுப்பிரமணிய பாரதி மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை நூல்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு இணையமைச்சர் எல்.முருகன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, நிதியமைச்சர் வாழிய பாரத மணித்திரு நாடு மின்னூல் வெளியிட்டார்.
தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது,
பாரதியார் பிறந்த மண்ணில் நிற்பதை நினைத்தால் உள்ளம் நடுங்குகிறது. அவரது ஒவ்வொரு வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உள்ளது. அவர் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து பார்த்தால் அவரால் எப்படி இவ்வாறு பாட முடிந்தது என்று தான் தோன்றுகிறது. ஏழ்மையை தவிர ஒன்றையும் பார்க்காதவர். அதற்காக தன்மானத்தை விட்டு, எங்காவது ஏதாவது உழைக்கிறேன் என்றில்லாமல், தனக்கு கிடைத்த வேலை வாய்ப்பை கூட எழுதி இந்த நாட்டுக்கு ஒரு உணர்ச்சி உண்டாக்க வேண்டும். மக்களை எழுப்ப வேண்டும் என முயற்சி பண்ணினார்.
அந்த காலத்தில் பெண்களுக்கென தனி பத்திரிகை நடத்தியவர். அவரை ஏராளமானோர் கிண்டல் செய்தனர். அதனை அவர் கண்டுகொள்ளவில்லை. தனது மனைவியை அழைத்துச்செல்லும் போது, அவரது தோளில் கைவைத்து, தோழனுடன் நடப்பது போல் நடப்பார். இன்றைக்கு சமத்துவம், பெண்ணுரிமை பற்றி பேசுபவர்கள், அவர்கள் பேசுகிறார்களே தவிர பண்ணி காட்டுவதில்லை. அவரது வார்த்தைகள் சக்தி என்றால், அவருக்கு உள்ளே இருந்தது வைரம் மாதிரியான பலம். ஏழ்மை, ஏளனம் என்னை தாக்காது. மற்றவர்களின் ஏளனத்தை அவர் கண்டுகொள்ளவில்லை. நீ சொல்வதைச் சொல். எனது வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் உன்னை தாக்கும் என்றார். அவரது பாடல்களை இன்றைக்கு நாம் பாடினாலும் உணர்ச்சி எழும்பும். நாட்டு பற்றி இப்பேர்பட்ட பாடலை பாடியுள்ளாரே, அதுவும் சக்தி வாய்ந்த மொழி தமிழில் பாடியுள்ளார்.
அவர் 1921-ம் ஆண்டில் காலமானார். அப்போது சுதந்திரம் வரும் என்ற கனவு கூட காண முடியாத நிலை இருந்தது. 1947-ல் சுதந்திர வரும்போது என்ன உற்சாகம் இருக்கனுமோ, அதனை 1921-க்கு முன்பே பாரதியார் பாடிவிட்டார். பாரதியார் எழுதியது கவிதைகள் எதுவும் எளிமையானது இல்லை. ஒவ்வொரு கவிதைகளும் அவர் உடம்பில் உள்ள உணர்ச்சிகளை பிழிந்து எடுத்து போட்டது தான்.
பாரதியார் ஆன்மிகத்தில் திளைத்தவர். பராசக்தி என்று பேசுவார். ஆனால், கிருஷ்ணனை பற்றிய எண்ணம் வந்தவுடன், கண்ணனை தந்தை, தாய் என எல்லாவிதத்திலும் பார்த்து அனுபவித்த மாதிரி பாடல்களை பாடினார். 38 வயது தான் வாழ்ந்தார். ஆனால், அதற்குள் அவரது உடம்புக்குள் உள்ள எரிமலையை என்ன விதங்களிலும் எடுத்து கூறினார் என்று பார்த்தால், ஒவ்வொரு கவிதையும் ரத்தினங்களாக மின்னுகிறது. இந்த நாடு அவருக்கு என்ன கொடுத்தது.
பாரதியார் பற்றி தேசிய அளவில் எடுத்துச்சொல்ல வேண்டும் என ஏராளமானோர் முயற்சி எடுத்துள்ளனர். நேற்று பிரதமர் நரேந்திர மோடி, காசி விஸ்வவித்யாலயம் பல்கலைக்கழகத்தில், தமிழுக்கு ஒரு இருக்கை அமைத்துள்ளார்.
எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார், காசிக்கு போய் சம்ஸ்கிரதம், இந்தி, ஆங்கிலம் என அனைத்தையும் கற்று வந்து, யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழியை போன்று இனிதாவது எதுவுமில்லை என கவிதை இயற்றினார். அதனால் தமிழுக்கு ஒன்றும் நஷ்டமாகவில்லை. அதன் பின்னர் அமுதாமான கவிதைகளை இயற்றி கொடுத்துள்ளார்.
தமிழை வளர்க்க வேண்டும். அதில் இன்னும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைத்து, அதற்கு சுப்பிரமணிய பாரதியார் பெயரை சூட்டி நேற்று பிரதமர் அறிவித்துள்ளார். பாரதியார் புகழை எட்டயபுரம் மக்கள் காப்பாற்றி வருகின்றனர். தேசிய அளவில் பிரதமரே திரும்ப திரும்ப பாரதியார் குறித்து பேசி வருகிறார்.
பாரதியாரின் புகழ் உலகளவில் உள்ளது. இன்னும் இந்த மணிமண்டபத்தை சிறப்பாக வைக்கலாம். அங்குள்ள பொருட்களை இன்னும் அழகாக வைத்து காண்பிக்கலாம். நாடு முழுவதும் பாரதி பற்றி எடுத்துச்சொல்வோம்.
பள்ளிகளில் உள்ள சின்னசிறு பிள்ளைகளுக்கு பாரதியாரின் பாடல்களை கற்றுக்கொடுங்கள் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கிறேன். இந்த 100-வது ஆண்டு நினைவு முன்னிட்டு, நமது பிள்ளைகளுக்கு பாரதியின் கவிதைகளை எடுத்துச்சொல்ல வேண்டிய நிலை வந்துள்ளது. பாரதியாரின் பாடல்கள் போட்டிகள் வைத்து, பரிசுகள் வழங்குங்கள். பாரதியை பாடுவது மூலமாக நாட்டுப்பற்று வளரும். அவர் அனுபவித்து கஷ்டங்கள் போல் யாரும் அனுபவித்திருக்க முடியாது. இருந்தாலும் இந்த நாடு என்ன செய்தது என்று கேட்டாமல், நாடு நல்லாயிருக்க வேண்டும். பாரத தாய் ஒரு தாய் தான். ஆனால் அவர் பல மொழிகளில் பேசுவாள் என்றளவுக்கு பாரத தாயை அனுபவித்து பாடியுள்ளார், அதனால் பாரதியை மறக்க கூடாது. அவர் எட்டயபுரத்து சொத்து. அந்த சொத்து பகிர்ந்து கொடுக்கும் போது அது வளரும், என்றார் அவர்.
முன்னதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு இணையமைச்சர் பேசுகையில், 75-வது சுதந்திரத்தை முன்னிட்டு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை சார்பில் 75 தலைவர்களின் நிகழ்ச்சிகளையும், அவர்களின் வரலாறு அனைத்து பகுதிகளுக்கு கொண்டு செல்கிறோம். சுப்பிரமணிய பாரதியார் என்றால் நமக்கு எழுச்சி, உத்வேகம் கொடுக்கும். அவரை நாம் கவிதை ஆசிரியர், பாடல் ஆசிரியர், சுதந்திர போராட்ட வீரர் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், அவர் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியாக இருந்திருக்கிறார். சமூக சீர்திருத்ததை பற்றி அனைவரும் பேசுகின்றனர். ஆனால், அதில் பாரதியார் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளார், என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ., மத்திய தகவல் ஒலிபரப்பு தென் மண்டல தலைமை இயக்குநர் எஸ்.வெங்கடேஷ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT