Published : 12 Sep 2021 06:38 PM
Last Updated : 12 Sep 2021 06:38 PM
மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் பொதுத்துறை வங்கிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு தொடக்க விழா தூத்துக்குடி வஉசி கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது. வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான கே.வி.ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் அட்டையை வெளியிட்டார். வங்கியின் நடமாடும் டிஜிட்டல் லாபி வாகனம் மற்றும் கரோனா தடுப்பூசி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு கடனுதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 100 ஆண்டுகளை கடந்திருப்பது மிகப்பெரிய சாதனை. 100 ஆண்டுகளாக ஒராண்டு கூட தப்பாமல் லாபம் சம்பாதித்து பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகை வழங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தமிழகத்தில் வங்கித்துறைக்கு ஒரு பெரிய உதாரணமாக விளங்குகிறது.
வங்கித்துறையில் ஒரு காலகட்டத்தில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. 2014-ம் ஆண்டுக்கு முன்பு வங்கித்துறையில் ஏற்பட்ட பிரச்சினையால், பெரிய பொதுத்துறை வங்கிகள் கூட பாதிக்கப்பட்டன. வங்கித்துறையில் பிரச்சினை ஏற்பட்டால், அந்த வங்கியுடன் நிற்காது. அதனை சார்ந்துள்ள தொழில்களும் பாதிக்கப்படும்.
2014-ம் ஆண்டுக்கு பிறகு பொதுத்துறை வங்கிகளில் பலவிதமான கணக்குகளில் பணம் திரும்பி வராத நிலை ஏற்பட்டது. இதனால் அரசு மூலமாக வங்கிகளுக்கு நிதி வழங்கும் நிலை ஏற்பட்டது. வராக்கடன்களை வசூல் செய்வதற்காக முழு திறனையும் பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. இந்த வராக்கடன் காரணமாக வங்கித்துறையின் மீது பல கவலை வந்தது. 2019- வரை தொடர்ந்து பல்வேறு திருத்தம் செய்து, தற்போது பல பொதுத்துறை வங்கிகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தங்கள் விவகாரங்களை சரியாக நடத்தி வந்ததால், சூறாவளி காற்றிலும் தடுமாறாமல் நல்லபடியாக நடந்து வருகிறது. நாடார் சமுதாயத்துக்கு வணிக திறமை இயற்கையாக அவர்களது டிஎன்ஏவில் உள்ளது. அதனால்தான் நாடார் வங்கி என்றழைக்கப்படும் தமிழ்நாடு மெர்க்கன்டையில் வங்கி சூறாவளி காற்றிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் தொடங்கி, நாடு முழுவதும் இருக்கக்கூடிய நாடார் சமுதாய வங்கி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி.
வங்கிகள் மின்னணு முறைக்கு மாறுவதும் முக்கியம். வங்கி மின்னணு முறைக்கு மாறுவதால், நகரில் இருந்து கொண்டே கிராமப்புறங்களுக்கு வங்கி சேவையை வழங்க முடியும். இதனால் நிதி தொழில்நுட்பம் தொடர்பான பல பிரச்சினைகளை தீர்க்க முடியும். தானியங்கி புள்ளிவிவரம் சேகரிக்க முடியும். இது வங்கியின் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மின்னணு முறையை செயல்படுத்தி வருகிறது. இன்னும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
தென் தமிழகம் பல விசயங்களில் முன்மாதிரியாக இருந்துள்ளது. உதாரணமாக 1930-ல் பட்டியலினத்தவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்ல நடவடிக்கை எடுத்து, சமூக நீதியில் முன்னோடியாக உள்ளோம். இதே போன்று வங்கித்துறையில் முன்னோடியாக இருந்து மின்னணு முறையை கொண்டு வந்து, நிதி ஒருங்கிணைப்பு செய்வதால் ஏழை, எளிய மக்களுக்கும் வங்கித்துறை பயன்தரும்.
இதனை குறிக்கோளாக கொண்டு தான் பிரதமர், ஜன்தன் யோஜனா வங்கி கணக்கை அறிவித்தார். இதன் மூலம் ரூபே கார்டு வழங்கி, எந்தவிதமான தாழ்வு மனப்பான்மை இல்லாமல் பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்தார். பெரும்பாலான வங்கி கணக்கு பூஜ்ஜியமாக இருக்கும் என்று பிரதமருக்கு நன்கு தெரியும். ஆனால் அவர்களை வங்கியோடு இணைக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதனால் வங்கியின் மூலம் கிடைக்கும் பயன்கள் அந்த மக்களுக்கு கிடைக்கும் என நம்பினார்.
ஜன்தன் வங்கி கணக்கு தொடங்கப்பட்டதால், ஏழை, எளிய மக்களுக்கு கடன் கிடைக்கிறது. தனிமனிதன் சுயமாக தொழில் தொடங்குவதற்கான நிதி உதவி வங்கி மூலம் கிடைக்கவில்லையென்றால், அவர்கள் உள்ளூரில் வட்டிக்கு பணம் பெற்று, அதனை திருப்பி செலுத்த முடியாமலும், திருப்பி செலுத்தினாலும் பல பேச்சுக்களை பெறும் நிலை உள்ளது. ஆனால் இன்று சிறு, சிறு தொழிலுக்கு கூட ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு மூலம் நிதியுதவி கிடைத்துள்ளது.
கரோனா காலத்திலும் நிவாரண உதவிகளை வழங்க முடிந்தது. வங்கி அனைவருக்கும் முக்கியமானது. வங்கி அனைவரின் அடிப்படை உரிமை என்பதை புரிந்து கொண்டவர் பிரதமர் மோடி. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 74 சதவீதம் முன்னுரிமை கடன்கள் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமை தொழில்களுக்கு அதிக அளவில் கடன் கொடுக்கும் போது, கிராமப்புறங்களில் வங்கி வளர்ச்சி பெறும். அந்த வகையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிராமப்புறங்களில் வளர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல் நாட்டுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளித்து வங்கி மூலம் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை வாங்கும் மக்கள் திருப்பி செலுத்துவதால் பொறுப்பு வருகிறது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் முன்னேற முடியும்.
கரோனா காலத்தில் அவசர கால கடன் உறுதியளிப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் சிறு, குறு தொழில்களுக்கு அடமானம் மூலம் கடன் பெற்றவர்கள், கரோனா காலத்தில் மீண்டும் கடன் பெற எந்தவித அடமானமும் இன்றி கடன் பெற்றுக் கொள்ள வழிவகை செய்தது. இதன் மூலம் சிறு, குறு தொழில்கள் கஷ்டகாலத்தை கடந்து நடந்து கொண்டு இருக்கிறது.
அதே போன்று மருத்துவமனைகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 73 கோடி மக்களுக்கு நாடு முழுவதும் ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவக்கு கூடுதல் திட்டங்களை கொடுத்துள்ளோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
விழாவுக்கு வங்கி முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் இயக்குநர் சி.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக தபால் துறை தலைவர் ஜி.நடராஜன், நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக வங்கி துணைத்தலைவர் சிதம்பரநாதன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT