Published : 12 Sep 2021 05:35 PM
Last Updated : 12 Sep 2021 05:35 PM
"சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி சாதனங்களை அனைத்து அரசு கட்டடங்களில் பொறுத்துவதும், மழைநீர் சேகரிப்பும் தற்போதைய சூழலில் கண்டிப்பான தேவை" என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு 3 நாள் பயணமாக புதுவைக்கு இன்று காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்தார். புதுவை லாஸ்பேட்டை விமானதளத்தில் அவரை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் வரவேற்றனர், அங்கிருந்து கார் மூலம் பாரதியார் இல்லத்துக்குச் சென்றார்.
அங்கு பாரதியார் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி புகைப்படங்களைப் பார்வையிட்டார். சிறிது நேரம் பாரதி இல்லத்தில் அமர்ந்திருந்தார். பிறகு ஜிப்மர் மருத்துவமனை வந்தார்.
அங்கு நடைபெற்ற விழாவில் ரூ.7.67 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சூரியஒளி மின் திட்டத்தைத் தொடங்கி வைத்து குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு பேசியதாவது:
சூரிய மின் உற்பத்திக் கூரை அமைக்க ஜிப்மர் வளாகத்தில் உள்ள 15 மருத்துவமனை, விடுதி கட்டிடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மின் ஆலை ஜிப்மரின் 15 சதவீத மின் தேவையைப் பூர்த்தி செய்யும். இதன்மூலம் 1.5 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்துதலில் இந்தியா முன்னேற்றத்தில் உள்ளது. சூரிய ஒளியில் மின்சார உற்பத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்தது. சூரிய ஒளி மின்சாரஉற்பத்தி சாதனங்களை அனைத்து அரசு கட்டிடங்களில் பொருத்துவதும், மழைநீர் சேகரிப்பும் கண்டிப்பான தேவையாகவுள்ளது.
இந்த பரிசோதனை முயற்சியை மத்திய, மாநில, உள்ளாட்சித்துறையினர் பார்த்துக் கடைப்பிடிக்கவேண்டும். இதற்கு அதிகப் பிரச்சாரம் தேவை. அரசு மானியமும் தருகிறது. சூரிய ஒளியில் மின்சாதனங்களைப் பொருத்த முதலில் நிதி தேவைப்பட்டாலும், அது நீண்டகாலம் பயன் தரும். மின்கட்டணம் செலுத்தும் தேவையும் இருக்காது.
கரோனா காலத்தில் பல படிப்பினைகள் கிடைத்துள்ளன. அதில் முக்கியமானது இயற்கையாக காற்று வந்து செல்லும் வகையிலும் சூரிய ஒளி உள்ளே வருவது போலவும் புதிய கட்டடங்கள் கட்டமைப்பு அவசியமாகிறது. ஏனெனிலும் காற்றுக்கும், சூரிய ஒளிக்கும் இயற்கையாகவே குணப்படுத்தும் தன்மையுள்ளது. புதிய கட்டிடங்களில் இதைச் செய்யவேண்டும். இது நம் பாரம்பரியம். நடுவில் இதை மறந்து விட்டோம்" என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமியைப் பேச அவைக்காமல் ஆளுநரைப் பேச அழைத்தனர். அதை வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து ஆளுநர் பேச அழைத்ததால் ரங்கசாமி பேச மறுத்துவிட்டார்.
பின்னர் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசுகையில், சூரியன் விட்டமின் டியுடன் மின்சக்தியைத் தருகிறது. மருத்துவமனை சார்ந்த மின்தயாரிப்பு மையம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. நூறு சதவீதம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தடுப்பூசியே தொற்றிலிருந்து காக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சூரிய ஒளி சாதனங்கள் அமைக்கப்பட்டது பற்றிக் கேட்டபோது, "ஜிப்மரில் இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1.7 கோடி மிச்சமாகும். மின் ஆலைக்கான செலவு 5 ஆண்டுகளில் ஈடு செய்யப்படும். மின் ஆலையில் 25 ஆண்டுகளில் முதலீட்டு மதிப்பில் குறைந்தபட்ச வருமானம் ரூ.40 கோடியாக இருக்கும். சூரியஒளி மின் உற்பத்தி ஆலைக்கு 5 ஆண்டு உத்தரவாதமும், சோலார் பேனல்களுக்கு 25 ஆண்டு உத்திரவாதம் உள்ளது" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT