Published : 12 Sep 2021 04:22 PM
Last Updated : 12 Sep 2021 04:22 PM
நீட் தேர்வு மையத்தில் அடிப்படை வசதியில்லை, போதிய ஏற்பாடு செய்யவில்லை என்று ஆய்வு செய்ய வந்த ஆளுநர் தமிழிசையிடம் பெற்றோர் தொடர் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து முறையிட்டனர்.
கடந்த மே மாதம் நடக்கவேண்டிய நீட் தேர்வு கரோனா சூழலால் இன்று புதுச்சேரியில் 14 மையங்களில் நடந்தது. புதுச்சேரியில் மொத்தம் 7,124 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு வருகையால் இசிஆர் சாலையில் இருந்து ஜிப்மர் வரை மூடப்பட்டது. ஜிப்மர் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, நீட் தேர்வு மையங்களில் ஒன்றான முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் இன்டர்நேஷனல் பள்ளிக்கு ஆளுநர் தமிழிசை வந்தார். அப்போது பெற்றோர் பலரும் ஆளுநர் தமிழிசையிடம் முறையிட்டனர். "வெங்கய்ய நாயுடு வருகையினால் கடும் சிரமத்தில் இங்கு வந்தோம். இங்கு ஷாமியானா பந்தல், குடிநீர் வசதி கூட செய்து தரவில்லை. வெயிலில்தான் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தனர்.
இதையடுத்து மையப் பொறுப்பாளரான பள்ளித் தரப்பில் இருந்தவரை ஆளுநர் அழைத்து, உடனடியாக வசதி செய்து தர உத்தரவிட்டார். இதையடுத்து ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டு, தண்ணீர் வசதி செய்யப்பட்டது.
அதையடுத்து நீட் தேர்வு எழுத வந்திருந்த மாணவ, மாணவிகளிடம் பூக்கள் கொடுத்து ஆளுநர் பேசும்போது, தேர்வினைத் தன்னம்பிக்கையோடு கவனமாக எழுத வேண்டும். நாம் ஒரு குறிக்கோளை நோக்கிப் பயணிக்கும்போது நம்முடைய முழு முயற்சி வெற்றியைத் தரும். நம்முடைய உழைப்பும் கடவுளின் அருளும் நமக்குத் துணை இருக்கும். முயற்சி செய்வதே மிகப்பெரிய வெற்றி. முயற்சிப்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். முயற்சி செய்தால் மருத்துவராகும் வாய்ப்பை இந்த நீட் தருகிறது. தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும் என்று திருக்குறளைக்கூறி நம்பிக்கையுடன் முயற்சிக்கவேண்டும்" என்று குறிப்பிட்டார்.
பெற்றோர் தரப்பில் பேசுகையில், "இந்தப் பள்ளியில் 544 பேர் தேர்வு எழுதினர். குடியரசு துணைத்தலைவர் வருகையால் சாலைகள் மூடப்பட்டதால் கடும் நெருக்கடி ஏற்பட்டு, குழந்தைகள் நடந்துதான் வரவேண்டியிருந்தது. இம்மையத்தில் அடிப்படை வசதி கூட தரவில்லை. பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடும் போக்குவரத்து நெரிசலால் இன்று அவதியடைந்தோம்" என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT