Published : 12 Sep 2021 03:19 AM
Last Updated : 12 Sep 2021 03:19 AM
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மற்றும் தலைவர்கள் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின்: நாட்டைக் காத்த ராணுவ வீரராகவும், சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தில் அவரது உரிமைக் குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்குவோம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவரும், விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவருமான இமானுவேல் சேகரனின் 64-வது நினைவு தினத்தில் அவரது நினைவையும், அவர் செய்த தியாகங்களையும் போற்றுவோம்.
அவர் மக்களின் உணர்வோடு கலந்தவர். 7 மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். வசதியாகவும், சொகுசாகவும் வாழ வாய்ப்புகள் இருந்தும், அவற்றை துறந்துவிட்டு தமது மக்களின் சமூக விடுதலைக்காக போராடியவர். இமானுவேல் சேகரனின் தியாகம் இன்னும் உரிய வகையில் அங்கீகரிக்கப்படவில்லை. அவரது நினைவு தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்று நம்புவோம்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: மிகப் பெரிய சமூகத் தீமையான தீண்டாமையை அகற்றுவதற்கு முனைப்புடன் பாடுபட்ட இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தில் அன்னாருக்கு இதய அஞ்சலியை செலுத்துகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பணிகளை இந்நாளில் நினைவு கூர்வோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment