Published : 11 Sep 2021 08:01 PM
Last Updated : 11 Sep 2021 08:01 PM
திமுகவின் ஆட்சியை அதிமுகவினரே பாராட்டுகின்றனர் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தெரிவித்தார்.
புதுக்கோட்டை திருக்கோகரணத்தில் இன்று இரவு (செப்.11) நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் அவர் பேசியது:
சட்டப்பேரவையில் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக 110 விதியின் கீழ் முத்து முத்தான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் யாருமே திமுக அரசை எதிர்த்து பேசுவதில்லை.
எதிர்த்து பேசக்கூடியவர்கள் வெளிநடப்பில் சென்றுவிடுகிறார்கள். அல்லது அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் போன்றோர்கூட திமுக அரசை பாராட்டி பேசும் அளவுக்கு திமுக ஆட்சியின் செயல்பாடு உள்ளது.
தேர்தல் அறிக்கையில் கூறியதைப் போன்று, பெட்ரோல் மற்றும் ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு நகர் பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதேநிலையில் அரசின் செயல்பாடு தொடருமேயானால் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும்.
அதிமுக ஆட்சியில் 6 மாதங்களில் 50 லட்சம் பேருக்குதான் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த 110 நாட்களுக்குள்ளாகவே கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், மத்திய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளைப் பெற்று, 3.70 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கட்சியில் புதிதாக இணைந்தவர்கள், வந்தோம், புகைப்படம் எடுத்துக்கொண்டோம் என்றில்லாமல், கட்சிக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கீரனூரில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு, புதுக்கோட்டையில் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோடு, லெணா விலக்கில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அரசு வழக்கறிஞர் ரவிச்சந்திரன், மநீம மாவட்டத் தலைவராக இருந்த மூர்த்தி உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 5,000 பேர் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT