Last Updated : 11 Sep, 2021 06:56 PM

1  

Published : 11 Sep 2021 06:56 PM
Last Updated : 11 Sep 2021 06:56 PM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 16 மையங்களில் நாளை ‘நீட்’ தேர்வு: 8,672 பேர் தேர்வு எழுத உள்ளனர்

அரியூர் ஸ்பார்க் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையத்தை நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளரும், சிருஷ்டி பள்ளி முதல்வருமான சரவணன் இன்று ஆய்வு செய்தார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 16 மையங்களில் நாளை ‘நீட்’ தேர்வு நடைபெற உள்ளது. இதில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு எழுத உள்ளனர்.

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 மையங்கள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 மையங்கள், வேலூர் மாவட்டத்தில் 12 மையங்கள் என மொத்தம் 16 மையங்களில் நாளை ‘நீட்’ தேர்வு நடைபெற உள்ளது. பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் காலை 11.30 மணி முதல் பகல் 12.40 மணிக்குள்ளாக தேர்வு மையங்களுக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் முகக்கவசம், கையுறை, இருக்கம் இல்லாத ஆடைகளை அணிந்து வரவேண்டும். ஜீன்ஸ் பேண்ட், சல்வார், நீளமான ஸ்கர்ட், டி-சர்ட், டிரவுசர், சாதாரண சட்டை ஆகியவற்றை அணியலாம். முழுக்கை சட்டை, பெரிய பெரிய பட்டன்கள் உள்ள சட்டைகள், அடர் நிறம் கொண்ட ஆடைகளை அணியக்கூடாது. அதேபோல, ஷூஸ் மற்றும் கைக்கடிகாரம் அணியக்கூடாது.

மாணவிகள் தங்க நகைகளை அணிந்து வரக்கூடாது. தேர்வுக்குத் தேவையான எழுதுபொருட்கள், தண்ணீர் பாட்டில், ஹால் டிக்கெட் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். அரசு வழங்கிய அடையாள அட்டை கட்டாயம் இருக்க வேண்டும். செல்போன், புளூடூத், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனப்பொருட்கள் எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதம் சார்ந்த நகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு தேர்வு மையத்தின் நுழைவு வாயிலில் மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். 99.4 டிகிரிக்கு மேல் உடல் வெப்பநிலை இருந்தால் அந்த மாணவ, மாணவிகள் தனி அறையில் அமர வைக்கப்படுவார்கள். உடல் வெப்பநிலை குறைந்தால் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். குறையாவிட்டால் அதே அறையில் அவர்கள் தேர்வு எழுதலாம்.

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கருப்பு, வெள்ளை நிறுத்தில் கேள்வித்தாள்களும், தமிழ் மொழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பச்சை நிறத்தில் கேள்வித்தாள்களும் வழங்கப்படும். ஒவ்வொரு தேர்வு மையத்தில் ஒரு உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் 7 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேள்வி மற்றும் விடைத்தாள்கள் பாதுகாப்புடன் கொண்டு செல்ல துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் சிரமமின்றி செல்ல சிறப்புப் பேருந்துகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு அறையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி மாணவர்கள் அமர வைக்கப்படுவார்கள். மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து தேர்வை எழுதலாம். நீட் தேர்வு நடைபெறும் மாவட்டங்களில் ‘நீட் தேர்வு ஒருங்கிணைப்புக் குழுக்கள்’ மூலம் தேர்வு மையங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ‘நீட்’ தேர்வு ஒருங்கிணைப்பாளரும், வேலூர் சிருஷ்டி மேல்நிலைப் பள்ளியின் முதல்வருமான சரவணன் வேலூரில் உள்ள நீட் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு செய்தார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் அவர் கூறியதாவது:

”வேலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. அதில், வேலூர் விஐடி பல்கலை.யில் 900 மாணவர்கள், காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளியில் 720 மாணவர்கள், சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி பள்ளியில் 720 மாணவர்கள், காட்பாடி சிருஷ்டி வித்யாஷரம் பள்ளியில் 600 மாணவர்கள், சாயிநாதபுரம் கிருஷ்ணசாமி மேல்நிலைப் பள்ளியில் 540 மாணவர்கள், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 540 மாணவர்கள், சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 480 மாணவர்கள், கிங்ஸ்டன் இன்டர்நேஷனல் பள்ளியில் 420 மாணவர்கள், அரியூர் ஸ்பார்க் மெட்ரிக் பள்ளியில் 420 மாணவர்கள், ஸ்ரீ நாராயணி வித்யாஷரம் மேல்நிலைப்பள்ளியில் 212 மாணவர்கள், அரியூர் ஸ்பார்க் சீனியர் செகண்டரி பள்ளியில் 420 மாணவர்கள், வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் 300 மாணவர்கள் என மொத்தம் 6,272 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஏவி பெல் பள்ளியில் 360 மாணவர்கள், மேல்விஷாரம் குளோபல் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 240 மாணவர்கள் என மொத்தம் 600 பேரும், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மருதர் கேசரிஜெயின் மகளிர் கல்லூரியில் 900 மாணவர்கள், ஏலகிரி மலையில் உள்ள டான்போஸ்கோ கல்லூரயில் 900 மாணவர்கள் என மொத்தம் 1,800 பேரும் தேர்வு எழுத உள்ளனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 16 மையங்களில் 8,672 மாணவர்கள் நாளை நீட் தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அச்சமின்றி நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும்’’.

இவ்வாறு சரவணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x