Published : 11 Sep 2021 03:42 PM
Last Updated : 11 Sep 2021 03:42 PM
கோவையில் நாளை (செப். 12) 'மெகா' கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தடுப்பூசி முகாம் குறித்து, காதி, கதர் கிராமிய வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் பொ.சங்கர், அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.11) ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழக முதல்வரின் அறிவுரைப்படி நாளை மெகா கரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கேரள மாநில எல்லையோர மாவட்டங்களான கோவை, நீலகிரி மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள், மலைப் பகுதிகள், போக்குவரத்து வசதியற்ற பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகள் என ஊரகப் பகுதிகளில் 1,167 முகாம்கள், மாநகராட்சிப் பகுதிகளில் 308 முகாம்கள் என, மொத்தம் 1,475 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்த முகாமில் சுகாதாரத்துறையின் மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் மருத்துவமனைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் பணியாற்ற உள்ளனர். அதன்படி, ஒரு முகாமுக்கு ஒரு தடுப்பூசி செலுத்துபவர், ஒரு கணினி பதிவாளர், இரண்டு உதவியாளர்கள் என, 4 பேர் வீதம் 5,900 பேர் பணியாற்ற உள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 81% பேருக்குத் தடுப்பூசி
கோவை மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 38.67 லட்சம் ஆகும். இதில் 27.07 லட்சம் பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதில், இதுவரை 81 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 21 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
எவ்விதத் தடுப்பூசியும் செலுத்தாமல் 5.05 லட்சம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக 1.91 லட்சம் பேரும் உள்ளனர். கோவையில் நாளை நடைபெறும் முகாமில் 1.50 லட்சம் மக்கள் பயனடையும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எங்கெங்கு முகாம் நடைபெறுகிறது என்பதை மாவட்ட நிர்வாகத்தின் https://coimbatore.nic.in/ என்ற இணையதளம், சமூக ஊடகப் பக்கங்கள் https://www.facebook.com/CollectorCoimbatore , https://twitter.com/collectorcbe மூலம் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்".
இவ்வாறு சங்கர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகரக் காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா, இணை இயக்குநர் சந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, மாநகராட்சிப் பகுதியில் புலியகுளம் புனித அந்தோனியர் மேல்நிலைப் பள்ளி, உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, வ.உ.சி மைதானம் ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்த மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகளைக் கண்காணிப்பு அலுவலர் சங்கர் நேரில் பார்வையிட்டார்.
வ.உ.சி. மைதானத்தில் விரிவான ஏற்பாடு
'நம்ம கோவை' ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் கூறும்போது, "வ.உ.சி.மைதானத்தில் நாளை நடைபெறும் முகாமில் மட்டும் 2 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. இதற்காக 10 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட உள்ளன. கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு தனித்தனி கவுன்ட்டர்கள் அமைக்கப்படும். இதில், மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பு கவுன்ட்டர்கள் இடம்பெறும்.
தடுப்பூசி செலுத்த வருவோர் அமர 500 இருக்கைகள் போடப்பட உள்ளன. விசாலமான பார்க்கிங் வசதியும் உள்ளதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 'நம்ம கோவை', 'சி 4 டிஎன்' அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தடுப்பூசி முகாமை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வ.உ.சி. மைதானத்தைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் உள்ள மாற்றுத்திறனாளிகள், முதியோரின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த 5 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு வ.உ.சி. மைதானத்தில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் செல்ல இலவசப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT