Published : 11 Sep 2021 12:19 PM
Last Updated : 11 Sep 2021 12:19 PM
சிகிச்சை முடிந்து துபாயிலிருந்து இன்று சென்னை திரும்பினார் விஜயகாந்த்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் ஆண்டுதோறும் வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த இரு ஆண்டுகளாக கோவிட் தொற்றுப் பரவலால் அவர் வெளிநாடு செல்ல முடியவில்லை.
இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக கடந்த ஆக.30-ம் தேதி தன் இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் உதவியாளர்களுடன் விஜயகாந்த் துபாய் புறப்பட்டுச் சென்றார்.
அவர் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவும் உடன் செல்வதாக இருந்தது. ஆனால், அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருந்ததால், குறித்த காலத்துக்கு அவரால் செல்ல முடியவில்லை. இந்நிலையில், பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பிரேமலதாவும் துபாய் புறப்பட்டுச் சென்றார்.
துபாயிலிருந்தபடி தன் ட்விட்டர் பக்கத்தில், "நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்" என சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து, இன்று (செப்.11) எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT