Published : 11 Sep 2021 11:30 AM
Last Updated : 11 Sep 2021 11:30 AM

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 2 கோடி கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்: ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 2 கோடி கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை (செப். 12) கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில், சுமார் 40,000 மையங்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக, சென்னை, கிண்டியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"தடுப்பூசி செலுத்திய பிறகு அவர்களுக்கு ஏதேனும் விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்கள், சென்னை மாநகராட்சியிலும் இது குறித்த கரோனா விழிப்புணர்வு பதாகைகள், போஸ்டர்கள், மைக் மூலம் அறிவித்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பயனாளிகளுக்கு வழிகாட்டுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சராசரியாக 2,000 கரோனா தடுப்பூசி மையங்கள்தான் இருக்கும். ஆனால், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கத்தான் 40,000 வரை மையங்களை ஆரம்பிக்க அனுமதித்துள்ளோம். ஒரு மையத்தில் அதிகபட்சமாக 100-200 பேர் தான் அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம். இரண்டாம் தவணை செலுத்தத் தவறியவர்களும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னையில் கோயம்பேடு மார்க்கெட், மீன் மார்க்கெட்டுகளில் அவர்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்த மாதம் ஒரு கோடி தடுப்பூசி கொடுப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இம்மாதம் ஏற்கெனவே 10-ம் தேதி வரை 17 லட்சம் தடுப்பூசிகள் பெற்றிருக்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 2 கோடி தடுப்பூசி செலுத்தினால்தான் மீதமுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும். தடுப்பூசி செலுத்திய முதல் மாதத்தில் 3 லட்சம் தான் செலுத்தினோம். ஆனால், கடந்த மாதம் 92 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தியிருக்கிறோம். இம்மாதம் 10 நாட்களிலேயே 40 லட்சத்தைத் தாண்டிவிட்டோம். கூடுதல் தடுப்பூசிகளை தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறூத்துகிறோம்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x