Last Updated : 10 Sep, 2021 12:24 PM

3  

Published : 10 Sep 2021 12:24 PM
Last Updated : 10 Sep 2021 12:24 PM

வாகனங்களில் தலைவர்கள் படங்கள் இருந்தால் 2 மாதத்தில் அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை: கோப்புப்படம்

மதுரை

தமிழகத்தில் வாகனங்களில் தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு படங்கள் ஒட்டப்பட்டிருந்தால், அந்த படங்களை 60 நாட்களில் நீக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

"தமிழகத்தில் 50 சதவீத வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர்கள் ஒட்டியுள்ளனர். வழக்கறிஞர் என ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டியுள்ளவர்களில் பலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். கஞ்சா விற்பனையாளர்கள், ரவுடிகள் ஆகியோர், காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்கு இந்த ஸ்டிக்கர்கள் வாய்ப்பாக அமைகிறது.

வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது.
பக்கத்து மாநிலங்களில் அதிக அளவு சட்டக் கல்லூரி உருவாகத் தொடங்கியுள்ளது. அந்த கல்லூரிகளில் ரவுடிகள் பலர் பணம் கொடுத்து பட்டங்களைப் பெற்று வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் பயன்படுத்தி, தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து வருகின்றனர்.

எனவே, 2019 விதிகளின்படி பார் கவுன்சில் அனுமதி வழங்கிய ஸ்டிக்கர்களை வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், அனுமதி இல்லாமல் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஒட்டி, சட்டக்கல்லூரி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்".

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தது. இந்நிலையில், நீதிபதிகள் இன்று (செப். 10) பிறப்பித்த உத்தரவு:

"தமிழகத்தில் வாகனங்களில் வழக்கறிஞர் / பிரஸ் / போலீஸ் போன்ற ஸ்டிக்கர்கள் அதிகளவில் ஒட்டி உள்ளனர். இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள் அதிக அளவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. இது குறித்து, பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இதேபோல், தங்களது வாகனங்களில் அரசியல் கட்சியின் கொடிகள், தலைவர்களின் புகைப்படங்கள் சாதி கட்சி தலைவர்களின் படங்களை வெளிப்புறங்களில் தெரிவதுபோல் ஒட்டி பயன்படுத்தி வருகின்றனர். இது காவல்துறையினர் தங்களது வாகனத்தை நிறுத்தக்கூடாது, சோதனை செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் ஒட்டப்படுவதாக நீதிமன்றம் கருதுகிறது.

அரசியல் கட்சியினர் தங்கள் கொடிகளையும் தலைவரின் புகைப்படங்களையும் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தலாம் மற்ற நேரங்களில் இதன் பயன்பாடு தேவையில்லாத ஒன்று என நீதிமன்றம் கருதுகிறது. மேலும், இதனை பயன்படுத்த சட்டத்திலும் அனுமதி இல்லை.

எனவே, இதனை கருத்தில் கொண்டு நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பிக்கின்றது. இந்த உத்தரவை டிஜிபி, உள்துறை அமைச்சகம், போக்குவரத்து துறை இயக்குநர் ஆகியோர் வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றி வருடந்தோறும் உரிமம் புதுப்பிக்கப்படுகிறதா? வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள லைட் (முகப்பு விளக்கு) முறையாக பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

இதனை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் அல்லது அபராதம் விதித்து முகப்பு விளக்குகளை அதிகாரிகள் நீக்க வேண்டும் .

வாகனத்தில் தடை செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் அல்லது நிறம் ஊட்டப்பட்ட கண்ணாடிகள் இருந்தால் அதனை நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

வாகனத்தின் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை நீக்க வேண்டும்.

வாகனத்தின் நம்பர் போர்டுகள் மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த உத்தரவை 60 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் அல்லது வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்".

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x