Published : 09 Sep 2021 12:03 PM
Last Updated : 09 Sep 2021 12:03 PM
நெல்லையில் ரூ.15 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (செப். 09) சட்டப்பேரவையில் சட்டப்பேரவை விதி எண்:110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
"தமிழர் நாகரிகம் பண்டைய நாகரிகம் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளன. இதை யாராலும் அசைக்கவோ, மறுக்கவோ முடியாது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி தற்போது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. செங்கல் கட்டுமானம், தங்க அணிகலன்கள், பானைகள் உள்ளிட்டவை அங்கு கண்டறியப்பட்டுள்ளன.
கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கீழடி, கொற்கை, சிவகளை உள்ளிட்ட இடங்களில் தற்போது தொல்லியல் ஆய்வு நடைபெற்று வருகிறது. கி.மு. 6-ம் நூற்றாண்டுக்கு முன்பாகவே கொற்கை துறைமுகம் செயல்பட்டுள்ளது.
வெளிநாடுகளுடன் தமிழர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் கடல் வணிகம், முத்து குளித்தல் எனப் பல விஷயங்கள் அகழாய்வில் தெரியவந்துள்ளது.
2018-ம் ஆண்டு நேரில் சென்று கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டேன். தமிழ்ப் பண்பாட்டை அறிய தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன் தொடர்ச்சியாக, நெல்லையில் ரூ.15 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT