Published : 09 Feb 2016 03:38 PM
Last Updated : 09 Feb 2016 03:38 PM
திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் மெகா கோலப் போட்டிகளை நடத்தி பரிசு வழங்கி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள் ளது. எனவே அரசியல் கட்சியினர், வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் திமுக பொரு ளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் பெயரில் பெண்களின் வாக்குகளை குறிவைத்து மெகா கோலப்போட்டிகளை நடத்தி வருகிறார்.
தற்காலிக நீக்கம்
திமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தீவிர அரசியலில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்து பெங்களூரு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்தார்.
மேலும், முதல்வர் ஜெயலலிதா அழைத்தால் மீண்டும் அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாகவும், திருச்செந்தூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் அவருக்காக ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து திமுகவில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
மீண்டும் திமுகவில்
ஆனால், அனிதா ராதா கிருஷ்ணன் எதிர்பார்த்தபடி அதிமுகவில் இருந்து அவருக்கு எந்த அழைப்பும் வரவில்லை. இதனால் மீண்டும் திமுகவுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திமுக தலைமை அண்மையில் ரத்து செய்து, மீண்டும் அவரை கட்சியில் இணைத்துக் கொண்டது. இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திருச்செந்தூர் தொகுதி மீண்டும் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக் கையில் கடந்த சில மாதங்களாக தொகுதியில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரு கிறார்.
கோலப்போட்டி
பெண் வாக்காளர்களை கவரும் வகையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் தொகுதியில் உள்ள 3 ஒன்றியங்களிலும் தனித்தனியாக மெகா கோலப்போட்டி நடத்த முடிவு செய்து, முதலாவதாக திருச்செந்தூரில் நேற்றுமுன்தினம் போட்டியை நடத்தினார். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்ற கோலப்போட்டியில் சுமார் 8,500 பெண்கள் கலந்து கொண்டனர்.
தங்க சங்கிலி பரிசு
போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு தங்கச் சங்கிலிகளை பரிசாக அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். முதலிடம் பிடித் தவருக்கு 3 பவுன் தங்கச் சங்கிலி, 2-ம் இடம் பிடித்த பெண்ணுக்கு 2 பவுன் தங்கச் சங்கிலி, 3-ம் இடம் பிடித்த பெண்ணுக்கு 1 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 4 பேருக்கு ஆறுதல் பரிசாக அரை பவுன் எடையுள்ள கம்மல்களை பரிசாக வழங்கினார். மேலும், போட்டியில் கலந்து கொண்ட 8,500 பெண்களுக்கும் எவர்சில்வர் பாத்திரங்களை ஆறுதல் பரிசாக வழங்கினார்.
தொடர் போட்டிகள்
இதன் தொடர்ச்சியாக வரும் 14-ம் தேதி ஆழ்வார்திருநகரி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கான கோலப்போட்டி குரும்பூர் அங்கமங்கலத்தில் நடைபெறுகிறது. வரும் 21-ம் தேதி உடன்குடி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கான கோலப்போட்டி தண்டுபத்து கிராமத்தில் நடைபெறுகிறது.
பெண்களின் வாக்குகளை கவர கோலப்போட்டி நடத்துவது போல, இளைஞர்களை கவர விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கவும், விளையாட்டு உபகரணங்களை வழங்கவும் அனிதா ராதாகிருஷ்ணன் திட்ட மிட்டுள்ளார்.
வாய்ப்பு கிடைக்குமா?
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கடந்த 2001 முதல் 2006 வரை அதிமுக சார்பில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். 2006-ல் அதிமுக சார்பில் மீண்டும் வெற்றி பெற்ற அவர், 2009-ல் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து 2009 டிசம்பரில் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். 2011 தேர்தலிலும் திமுக சார்பில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
தற்போது 2016 தேர்தலிலும் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறும் வகையில் காய்களை நகர்த்தி வருகிறார். அவரது முயற்சி பலன் தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT