Published : 09 Sep 2021 03:15 AM
Last Updated : 09 Sep 2021 03:15 AM

பூந்தமல்லி சுகாதார மாவட்டத்துக்கான 7 நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனம்: பால்வளத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

பூந்தமல்லி சுகாதார மாவட்டத்துக்கான 7 நடமாடும் கரோனா தடுப்பூசி குழு வாகனங்களின் செயல்பாட்டை நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட பூந்தமல்லி சுகாதார மாவட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அவர்களின் வீடுகளின் அருகிலேயே கரோனா தடுப்பூசி செலுத்த ஏதுவாக 7 நடமாடும் கரோனா தடுப்பூசி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அக்குழுக்களுக்கான வாகனங்களின் செயல்பாட்டை நேற்று பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல், கரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வு பாடலின் குறுந்தகடையும் வெளியிட்டார்.

பின்னர் அமைச்சர் நாசர் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 11,70,179 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 10,84,465 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. அவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது தொடங்கப்பட்டுள்ள 7 நடமாடும் கரோனா தடுப்பூசி குழு வாகனங்களில், ஒவ்வொரு வாகனத்திலும் தடுப்பூசி செலுத்த ஒரு செவிலியர், ஒரு தரவு உள்ளீட்டாளர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வாகனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்கள், குக்கிராமங்கள் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் தினந்தோறும் முன் பயண திட்டப்படி சென்று தடுப்பூசி செலுத்த உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி மற்றும் திருவள்ளூர் சுகாதார மாவட்டங்களின் சுகாதார பணிகளுக்கான துணை இயக்குநார் செந்தில்குமார், ஜவஹர்லால், பூந்தமல்லி எம்எல்ஏ, கிருஷ்ணசாமி, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x