Published : 08 Sep 2021 04:42 PM
Last Updated : 08 Sep 2021 04:42 PM
தனியார் கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்திட ஊதிய நிர்ணயக்குழு அமைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (செப். 08) முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்:
"தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றுகிற ஆசிரியர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் அவலமான நிலைமைகளையும், நீண்ட காலமாக அவர்கள் முன்வைத்து வரும் கீழ்க்கண்ட கோரிக்கைகளையும் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
மேலும், கரோனா பெருந்தொற்று காலத்திலும், பல்வேறு இன்னல்களுக்கிடையேயும் கற்பித்தல் பணியை அர்ப்பணிப்போடு மேற்கொள்ளும் அவர்களின் கோரிக்கைகளை தீர்த்திட தமிழக அரசு தலையீடு மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
1. தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள கல்லூரி ஆசிரியர்களில் 80 சதவீதம் அளவில் சுயநிதி கல்லூரி ஆசிரியர்களும், அதேபோல, பள்ளி ஆசிரியர்களில் 50 சதவீதம் தனியார் பள்ளி ஆசிரியர்களும் உள்ளனர். அதாவது, தமிழகத்தில் பள்ளிக் கல்வியில் சரிபாதி மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும், உயர்கல்வி பயிலும் மாணவர்களில் மூன்றில் இரண்டு பங்கு மாணவர்கள் தனியார் கல்லூரிகளிலும் கல்வி பெறுகிற நிலைமை தமிழகத்தில் உள்ளது. அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் கல்விமுறை மற்றும் கற்பித்தலை போன்றே தனியார் பள்ளிகள், கல்லூரிகளிலும் பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
2. தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளதோடு, அரசு நிர்ணயித்துள்ள தகுதி படைத்தவர்களாகவும் சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றும் மிகப்பெரும்பாலான பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் பல்கலைக் கழக மானியக்குழுவின் வழிகாட்டுதலின்படி பி.ஹெச்.டி, நெட் (NET), செட் (SET) ஆகிய தகுதிகளை பெற்றவர்களாகவும் உள்ளனர்.
இத்தகைய தகுதியை பெற்றுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணிசமான ஊதியத்தை அரசாங்கம் வழங்கி வருவதோடு, அரசு கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு ஆரம்ப நிலை ஊதியமாக ரூ.76,809-ம், பேராசியர்களுக்கு அதைவிட கூடுதலான ஊதியமும் ஏழாவது ஊதியக்குழுவால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் ரூ.10,000 மற்றும் அதற்கும் குறைவான ஊதியத்தையும், சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களில் மிகப்பெரும்பாலானோர் அதிகபட்ச ஊதியமாக ரூ.25,000 மற்றும் அதற்கும் குறைவாகவும் பெற்று வருகின்றனர்.
3. கரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகள் இத்தகைய குறைந்த ஊதியத்தையும் கூட வழங்க முன்வராததோடு, வழக்கமாக அளித்து வரும் ஊதியமும் வெகுவாக குறைக்கப்பட்டு அதுவும் கூட பல மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
மேலும், நேரடியாக பள்ளி, கல்லூரி வகுப்புகளை நடத்த முடியாத சூழலில், ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் வகுப்புகளுக்கான மின்சாதன உபகரணங்களை வாங்க வேண்டுமெனவும் அதற்கான இணைய கட்டணத்தையும் ஆசிரியர்களே தங்கள் சொந்த செலவில் செலுத்திக் கொள்ள வேண்டுமெனவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
ஆனால், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவர்களிடம் பெற வேண்டிய அனைத்துக் கட்டணங்களையும் முழுமையாக வசூலித்துக் கொண்ட பிறகும் கூட இத்தகைய நிலைமையே நீடிப்பதை காணமுடிகிறது.
4. தனியார் பள்ளிகள், சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றுவோருக்கு பணியாளர் வைப்பு நிதி, பணியாளர் மருத்துவக் காப்பீடு ஆகிய சமூக பாதுகாப்பு அம்சங்கள் மறுக்கப்படுவதோடு, மருத்துவ விடுப்பு மற்றும் மாதாந்திர ஊதியத்துடன் கூடிய விடுப்பு உள்ளிட்டவைகளும் வழங்கப்படுவதில்லை. மேலும், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அமலில் உள்ளதைப் போல பணிப்பளுவை பகிர்வதற்கான நடைமுறைகள் எதுவும் தனியார் கல்லூரிகளில் பின்பற்றப்படுவதில்லை.
5. கரோனா காலத்தில் சம்பளத்தைக் குறைத்ததாலும், வேலைநீக்கம் செய்யப்பட்டதாலும் பல ஆசிரியர்கள் முறைசாரா தொழிலாளர்களாய் கூலி வேலைக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது. சென்னை ஆவடியில் உள்ள கல்லூரி ஒன்றில் சம்பளக் குறைப்பின் காரணமாக பனை ஏறும் தொழிலுக்குச் சென்ற ஆசிரியர் ஒருவர் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த துயரச்சம்பவமும் இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது.
எனவே, பணிபுரியும் ஆசிரியர்கள் யாரையும் வேலையை விட்டு நீக்கக் கூடாது என்றும் மேலும், இந்த கரோனா காலத்தில் பலருக்கு சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. சம்பளம் குறைக்கப்பட்ட அனைவருக்கும் முழுச்சம்பளம் வழங்கப்படவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.
6. எனவே, மேற்கண்ட நிலைமைகளை கவனத்தில் கொண்டு, தனியார் பள்ளிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றுகிற ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் ஊதியத்தை சமவேலைக்கு சம ஊதியம் என்ற வகையில், அரசு பள்ளி, அரசு கல்லூரிகளுக்கு இணையாக ஊதியம் நிர்ணயம் செய்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
7. தனியார் கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்திட ஊதிய நிர்ணயக்குழு ஒன்றினையும் அமைத்திட வேண்டும். இக்குழுவே, தற்போதைய பணி நிலைமைகளில் முன்னேற்றத்தையும், சமூக பாதுகாப்பு அம்சங்களையும் உறுதி செய்வதோடு, மேலும் இவற்றின் அமலாக்கத்தை கண்காணித்திடவும் வேண்டும்.
மேற்கண்ட வகையில் சில லட்சம் தனியார் பள்ளி மற்றும் சுயநிதி கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு தீர்த்து வைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT