Published : 08 Sep 2021 03:07 PM
Last Updated : 08 Sep 2021 03:07 PM
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
முதல்வர் இன்று வெளியிட்ட அறிவிப்புகள்:
* தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம் என்கிற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
* ஆதி திராவிட நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அறிவுத்திறன் வகுப்பு, கணினிப் பயிற்சி போன்றவை பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும்.
* வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை விரைவாக இறுதி செய்வதற்குத் தற்சமயம் தமிழ்நாட்டில் 18 சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. மேலும் நான்கு புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாநில அளவிலான விழிப்புணர்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து இன்னும் நான்கு புதிய நீதிமன்றங்களைச் சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி என வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையிலும், திருநெல்வேலியிலும் ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும், இந்த நான்கு மாவட்டங்களில் அதிக அளவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
* வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரை சமுதாயக் கண்ணோட்டத்துடன் அணுகி, முறையான நிவாரணம், வளமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்குவற்குத் தேவையான விழிப்புணர்வுப் பயிற்சிகள் ‘சமத்துவம் காண்போம்’ என்கிற தலைப்பில் காவல்துறை, வருவாய்த் துறை அலுவலர்களுக்கு நடத்தப்படும்.
* தமிழ்நாட்டில் பல கிராமங்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக் கூடாது என்பதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்தகைய சிற்றூர்களுக்கு ஊக்கத் தொகையாக வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
* வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு, 85,000 ரூபாயிலிருந்து 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது. இனி இத்தொகை பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தபட்சமாக ஒரு லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 12 லட்சம் ரூபாயாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT