Published : 08 Sep 2021 01:55 PM
Last Updated : 08 Sep 2021 01:55 PM
பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டி தேர்வில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 08) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாடு அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவித்து, ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தேர்வுகள் அடுத்த மாதத்தில் நடத்தப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகியுள்ளன. போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டு இரு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அத்தேர்வுகளை இப்போது நடத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.
அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான அறிவிக்கை கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்டு, அதே ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்தத் தேர்வுகளில் 196 மாணவர்களின் மதிப்பெண்கள் முறைகேடாக உயர்த்தி பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டித் தேர்வு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து, உச்ச நீதிமன்ற ஆணைப்படி பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் 1,060 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு 27.11.2019 அன்று அறிவிக்கப்பட்டது. அத்தேர்வுகள் 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவிருந்த நிலையில், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தேர்வுகளை வரும் அக்டோபர் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வாரியம் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
2019-ம் ஆண்டு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, இரு ஆண்டுகளாகிவிட்ட சூழலில் அப்போது விண்ணப்பித்தவர்களை மட்டும் கொண்டு, போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டால், அது அந்தப் பணிக்கு கடந்த இரு ஆண்டுகளில் தகுதி பெற்றவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாக அமைந்துவிடும்.
பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான அடிப்படைக் கல்வித் தகுதி, பொறியியல் சார்ந்த பாடங்களில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; பொறியியல் அல்லாத பாடங்களில் முதல் வகுப்பு மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்பதாகும்.
2019 ஆம் ஆண்டு போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இளநிலை / முதுநிலை பொறியியல் பட்டமும், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், நவீன அலுவலக நடைமுறைகள் போன்ற பொறியியல் அல்லாத பாடங்களில் முதுநிலைப் பட்டமும் பெற்று விரிவுரையாளர் பணிக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள்.
2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் இப்போட்டித் தேர்வு நடத்தப்பட்டால், அதற்குப் பிறகு தகுதி பெற்ற ஒரு லட்சத்துக்கும் கூடுதலானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும். இது சமவாய்ப்புத் தத்துவத்துக்கு எதிரானது ஆகும்.
தமிழகத்தில் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டது. பல்வேறு தடைகளைக் கடந்து இப்போது தான் போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. இந்தத் தேர்வுகளில் புதிதாக பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், அதன்பின் அவர்களுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது.
ஒருவேளை இன்னும் 5 ஆண்டுகள் கழித்து போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டால், 2019-ம் ஆண்டுக்குப் பிறகு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கே 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்களை இந்தப் போட்டித் தேர்வுகளில் இப்போதே பங்கேற்கச் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது, அதை அவர்களுக்கு மறுக்கக் கூடாது.
அதுமட்டுமின்றி, 26.07.2021 அன்று தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தப்பட்ட 26.02.2021-ம் நாளுக்குப் பிறகு அறிவிக்கை செய்யப்படும் அனைத்து பணி நியமனங்களிலும் புதிய இட ஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வு அறிவிக்கை 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டாலும், அதற்கான தேர்வுகள் இனி தான் நடைபெறவுள்ளன என்பதால், புதிய இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது தான் சரியாக இருக்கும்.
பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு புதிய அறிவிக்கை வெளியிட்டு, அதில் ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களும், புதிதாக தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிப்பதற்கு அனுமதித்து அவர்கள் அனைவரையும் போட்டித் தேர்வு எழுத அனுமதிக்கலாம். இதனால், பெரிய அளவில் காலதாமதம் ஏற்படாது. அதேநேரத்தில், விரிவுரையாளர் பணிக்கு புதிதாக தகுதி பெற்றவர்களுக்கு இழைக்கப்படவிருந்த துரோகம் தவிர்க்கப்படும்; சமவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
எனவே, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையை ரத்து செய்து விட்டு, புதிதாக ஏற்பட்ட காலியிடங்களையும் சேர்த்து, புதிய இட ஒதுக்கீட்டு விதிகளின்படி ஆள்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT