Published : 08 Sep 2021 12:12 PM
Last Updated : 08 Sep 2021 12:12 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப் பேரவையில் இன்று (செ .8) மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
அத்தீர்மானத்தில், “ அகதிகளாக வருவோரை மதரீதியாக பிரித்து பார்க்கும் வகையில் சிஏஏ சட்டம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு 2019- ஆம் ஆண்டு கொண்டு வந்த இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மதச்சார்பின்மை கோட்பாடுகளுக்கும், மத நல்லிணக்கத்துக்கு உகந்ததாக இல்லை.
இந்திய நாட்டின் ஒற்றுமையை போற்றும் வகையில் இந்திய குடியுரிமைத் திருத்த சட்டத்தை ரத்து செய்ய தமிழக சட்டப் பேரவை வலியுறுத்துகிறது” என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடபட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பாஜக வெளிநடப்பு
இந்திய குடியுரிமைத் திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்ட பேரவையில் தமிழக அரசு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் நால்வரும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நாயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்காத முதல்வர் ஸ்டாலின் மத நல்லிணக்கத்தை பற்றி பேசுவது வருந்தத்தக்கது. மோடி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் பாதுகாப்பாக இருப்பதற்கு மத்திய அரசு பாடுப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளி நடப்பு செய்கிறோம். அரசியலைப்பு சட்டப்படி மத்திய அரசுக்கு மக்கள் பாதுகாப்புக்காக சட்டம் கொண்டு வருவதற்கு இடம் இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT