Published : 08 Sep 2021 03:17 AM
Last Updated : 08 Sep 2021 03:17 AM
எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளிதுறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் எளிதாக வருவதற்காக, பெங்களூரு - சென்னை அதிவேகநெடுஞ்சாலை (6 வழிச்சாலை) அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இச்சாலைக்காக ஆந்திராவின் சித்தூரிலிருந்து, தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் வரை புதிய சாலைக்காக, ஆந்திராவில் 2,186 ஏக்கர், தமிழகத்தில்திருவள்ளூர் மாவட்டத்தில் 889 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில், சித்தூர்- தச்சூர் 6 வழிச் சாலை திட்டத்தை விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழிகளில் செயல்படுத்தக் கோரி நேற்று ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன், உயர்மட்டக்குழு உறுப்பினர் சுதா, திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆஞ்சநேயலு, மாவட்ட செயலாளர் செந்தில்வேலன் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் என, 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கோரிக்கை முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போதுபி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது: அதானி நிறுவனம், சென்னை அருகே காட்டுப்பள்ளியில் அமைத்துள்ள துறைமுகத்துக்கு அதிவிரைவு உயர் மட்டசாலை அமைப்பதற்காக மத்தியஅரசு தச்சூர்-சித்தூர் வரை விவசாயநிலங்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மாநிலஅரசு துணையோடு ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்
இந்தச் சாலையால் கொசஸ்தலை, ஆரணி ஆறுகளால் முழுப் பாசனம் பெறும் ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள 18 கிராமங்களில் விவசாயம் முழுமையாக அழிந்துபோகும். எனவே, மாற்றுத் திட்டமாக, கொசஸ்தலை ஆற்றின் மற்றொரு புறத்தில் விவசாய நிலங்கள் இல்லாத பகுதியில் இந்த சாலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்புதமிழக முதல்வர், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மீனவ கிராமங்களுக்கும், விவசாயத்துக்கும் அழிவை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி தனியார் துறைமுக விரிவாக்க திட்டத்தை ரத்து செய்வோம்' என உத்தரவாதம் அளித்தார். அதன்படி, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ரத்து செய்து, அதற்கு சாலை அமைப்பதற்காக விளைநிலங்களை அபகரிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT