Published : 08 Sep 2021 03:17 AM
Last Updated : 08 Sep 2021 03:17 AM
தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு, தமிழ்நாடு சிறப்புப் படை, ஊர்க்காவல், பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத் துறை, கடலோரக் காவல் படை, குற்றப் புலனாய்வு, உளவுத் துறை, பொருளாதாரச் சிறப்புப் பிரிவு, தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி, ரயில்வே காவல்துறை எனப் பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. இவற்றில் காவல் ஆணையர், மண்டல ஐஜிகள், டிஐஜிகள், எஸ்பிகள், டிஎஸ்பிகள், ஆய்வாளர்கள், எஸ்ஐகள் உட்பட 1,21,500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களில் 10.50 சதவீதத்துக்கு மேல் மகளிர் போலீஸார் உள்ளனர். ஒவ்வொரு நிலையிலும், சரியான நேரத்தில் பதவி உயர்வு, காலியிடம் நிரப்புதல், பணப்பலன் கிடைத்தல், சலுகை போன்ற காவல் துறையில் நிறைவேறாத கோரிக்கைகள் கிடப்பில் இருப்பதாகவும், சட்டப் பேரவையில் நாளை (செப்.9) நடை பெற உள்ள காவல் துறைக் கான மானியக் கோரிக்கை விவாதத்தில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றும் என எதிர்பார்ப் பதாகவும் தமிழக காவல் துறை யினர் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:
தமிழக காவல் துறையில் சார்நிலை ஊழியர், உயர் அதிகாரி என்ற இரண்டு கட்டமைப்பு உள்ளது. சார் நிலை ஊழியர் என்பது இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் என்பது துணை காவல் கண்காணிப் பாளர், உதவி காவல் கண்காணிப்பாளர் முதல் காவல் துறை தலைமை இயக்குநர் வரை உள்ளடக்கியது.
உயர் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு தள்ளிப்போனதில்லை. எடுத்துக்காட்டாக தமிழகத்தில் தற்போது ஒன்றுக்கு பத்து என்ற நிலையில் காவல் துறை இயக்குநர் பதவி உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, காவலர்கள் 10 ஆண்டுகள் பணிபுரிந்தால், அவர்களுக்கு அடுத்த பதவி உயர்வு என்ற உத்தரவு போட்டதால் அனைத்து கடை நிலை ஊழியர்களும் உயர் பதவிக்கு செல்கின்றனர். ஆனால் அதே கடைநிலை ஊழியர்களில் ஒன்றான நேரடி தேர்வு செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. உதவி ஆய்வாளர் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர் தாலுகா காவல் நிலையத்துக்கும் (சட்டம் -ஒழுங்கு) இரண்டாவது மதிப்பெண் எடுத்தவர் ஆயுதப்படைக்கும், மூன்றாம் மதிப்பெண் எடுத்தவர் பட்டாலியனுக்கும் அனுப்பப் படுவர். இன்றைக்கு இரண்டு, மூன்றாம் மதிப்பெண் எடுத்தவர்கள் பதவி நிலையில் உயர் பதவிக்கு சென்றுவிட்டனர். இதில் முக்கியம் என்னவென்றால் அடுத்த பேட்ச் உதவி ஆய்வாளர்களும் ஆய்வாளர் பதவி நிலைக்கு சென்றுவிட்டனர்.
2008-ம் ஆண்டு பணியில் சேர்ந்த நேரடி உதவி ஆய்வாளர்கள் 13 ஆண்டாகியும் இன்னும் உதவி ஆய்வாளர்களாகவே பணிபுரிகின்றனர். தன்னைவிட பணியில் இளையவர்கள் ஆய் வாளர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காவல்துறை நிர்வாக குளறுபடிக்கு இதுவும் ஒரு சான்று. காவலர்களுக்கு வழங்கியது போன்றே நேரடி உதவி ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் 10 ஆண்டு நிறைவடைந்தபின், ஆய் வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
மண்டலம்தோறும் காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்த வேண்டும். கரோனா காலத்தில் காவல் துறையினரைப் போல் சிறைத் துறையினருக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். காவல் துறையினருக்கு 8 மணி நேரம் பணி, காவலர் சங்கத்துக்கு அனுமதி, கூடுதல் பணி நேரத்துக்கு சிறப்பு ஊதியம் உள்ளிட்ட திமுகவின் 16 தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தொழில்நுட்பப் பிரிவு காவலர்களுக்கு ரிஸ்க் அலவென்ஸ் வழங்க வேண்டும். இத்துறையில் 36 டிஎஸ்பி காலியிடங்களை நிரப்ப வேண்டும். சிறை காவலர்களுக்கு முழு நாள் ஓய்வில்லை. அது பற்றி அறிவிக்க வேண்டும். இது போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT