Published : 08 Sep 2021 03:18 AM
Last Updated : 08 Sep 2021 03:18 AM
திருச்சி மாநகர காவல்துறையில் துணை ஆணையர், உதவி ஆணையர் பணிகளுக்கான நிர்வாக எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாநகர காவல்துறையில் தற்போது மாநகர காவல் ஆணையரின் கீழ் சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு என 2 துணை ஆணையர்கள் பணியிடங்கள் உள்ளன. இதேபோல கன்டோன்மென்ட், பொன்மலை, கோட்டை, ஸ்ரீரங்கம் ஆகிய 4 சரகங்களில் சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவுக்கென தனித்தனி உதவி ஆணையர்கள் உள்ளனர்.
இதுதவிர, ஆயுதப்படை, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, மாநகர நுண்ணறிவு பிரிவு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு, வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆகியவற்றுக்கும் தனித்தனி உதவி ஆணையர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.
இதில், துணை ஆணையர் நிலையைப் போலவே, சரக அளவிலும் சட்டம் ஒழுங்குக்கு தனியாகவும், குற்றம் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவுக்கு தனியாகவும் உதவி ஆணையர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.
இவர்களின் பதவி நிலை ஒரே அளவாக இருந்தபோதிலும் சட்டம், ஒழுங்கில் பணிபுரிவது உயர்வாகவும், குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவில் பணிபுரிவது அதற்கடுத்த நிலையிலும் இருப்பதாகவும், பாகுபாடு காட்டும் வகையில் இப்பிரிவுகளில் பணி நியமனம் செய்யப்படுவதாகவும் அதிகாரிகளிடையே நீண்ட நாட்களாக குமுறல் இருந்து வந்தது.
இப்பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும், சரகத்திலுள்ள காவல் நிலையங்களை ஒருங்கிணைத்து நிர்வாக பணிகளை எளிதில் மேற்கொள்வதற்காகவும் தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற அனைத்து மாநகரங்களுக்குமான நிர்வாக எல்லைகளில் மாற்றம் செய்து தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
இனி திருச்சி தெற்கு, வடக்கு
இதன்படி, திருச்சி மாநகரில் உள்ள 2 துணை ஆணையர்களுக்கான நிர்வாக எல்லைகள் சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு என்பதற்கு பதிலாக துணை ஆணையர் (தெற்கு), துணை ஆணையர் (வடக்கு) என மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல குற்றப்பிரிவு உதவி ஆணையர் பணியிடங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டு, கே.கே.நகர், தில்லைநகர், காந்தி மார்க்கெட் ஆகிய 3 காவல் சரகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல ஒவ்வொரு சரகத்துக்குமான காவல் நிலையங்களின் எண்ணிக்கையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
புதிய சரகம்
தற்போதைய உத்தரவின்படி தில்லைநகர் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, உறையூர் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, புத்தூர் அரசு மருத்துவமனை சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு ஆகிய காவல் நிலையங்கள் இனி தில்லைநகர் சரகமாக செயல்படும். காந்திமார்க்கெட் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, பாலக்கரை சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம், வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆகியவை காந்தி மார்க்கெட் சரகமாக செயல்படும்.
இதேபோல ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, கோட்டை சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை ஸ்ரீரங்கம் சரகமாக செயல்படும்.
தெற்கு எல்லைகள்
தில்லைநகர், காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் சரகங்களுடன், ஸ்ரீரங்கம், கோட்டை, உறையூர், பாலக்கரை ஆகியவற்றை உள்ளடக்கிய வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு, மத்திய குற்றப்பிரிவு ஆகியவற்றை கட்டுப்படுத்தி, கண்காணிக்கும் வகையில் திருச்சி வடக்கு துணை ஆணையரின் நிர்வாக எல்லை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கே.கே.நகருக்கு கூடுதல் ‘மவுசு'
இதேபோல கே.கே.நகர் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, விமானநிலைய சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கி புதிதாக கே.கே.நகர் சரகம் உருவாக்கப்படுகிறது. கன்டோன்மென்ட் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் பிரிவு, செஷன்ஸ் கோர்ட் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, எடமலைப்பட்டிபுதூர் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ரோந்து பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக கன்டோன்மென்ட் சரகம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொன்மலை சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர், அரியமங்கலம் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு ஆகியவை பொன்மலை சரகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு எல்லைகள்
கே.கே.நகர், பொன்மலை, கன்டோன்மென்ட் சரகங்களுடன் கன்டோன்மென்ட், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவை உள்ளடக்கிய தெற்கு போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சரகம், ஆயுதப்படை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆகியவை திருச்சி தெற்கு துணை ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவையாக கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றுடன் மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவும் துணை ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT