Last Updated : 07 Sep, 2021 04:48 PM

 

Published : 07 Sep 2021 04:48 PM
Last Updated : 07 Sep 2021 04:48 PM

பொது இடங்களில் நிறுவுவதற்கு தடை: விநாயகர் சிலைகளை வீடுகளில் மட்டுமே வைத்து வழிபட அனுமதி; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

விநாயகர் சதூர்த்தி விழா வரும் 10-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வைத்து வழிபடுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே வீடுகளில் வைத்து வழிபடும் அளவிலான சிறிய விநாயகர் சிலைகளை விற்பனைக்காக வைத்துள்ள வியாபாரி. படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவது மற்றும் பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பேசியதாவது: கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பது போன்ற தேவையான கட்டுப்பாடுகளை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி வரை சமய விழா கொண்டாட்டங்களுக்கு அரசு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. எனவே, விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அதுபோன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில் இந்த விழாவை பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது.

இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

தனி நபர்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியினைக் கடைப்பிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை எவ்வகையிலேனும் மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த விழாவுக்கான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தவறாது முககவசம் அணிவதோடு, அவ்விடங்களில் பொருட்கள் வாங்க நிற்கும் போதும் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரான கூடுதல் ஆட்சியர் சரவணன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் சிவசங்கரன் (தூத்துக்குடி), சங்கரநாராயணன் (கோவில்பட்டி), வட்டாட்சியர்கள், காவல் துறையினர், தூத்துக்குடி இந்து முன்னணி முக்கிய நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x