Published : 07 Sep 2021 02:57 PM
Last Updated : 07 Sep 2021 02:57 PM
'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்ற பாரதியின் வரிகளைக் காற்றில் பறக்கவிட்டு, நூற்றாண்டுகளைக் கடந்தும் மாதர்களைச் சீரழிக்கும் மடமைகள் தொடர்வது கொடுமை என்று மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மகளிரணி மாநிலச் செயலாளர் சினேகா மோகன்தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
’’பல்வேறு சமூகத் தடைகள் காரணமாகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்கள் சேவை செய்ய முன்வரும் மாதர்களின் சதவிகிதம் ஏற்கெனவே மிகக் குறைவு. அப்படிப்பட்ட சூழலில், துணிந்து அரசியல் களத்திற்கு வந்த மகளிருக்குப் பாலியல் தொந்தரவு தரும் அரசியல்வாதிகள் ஒரு புறம்; அப்படிப்பட்ட கீழ்த்தரமானவர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதோடு, பெண்களுக்காகக் குரல் எழுப்பும் ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரை 'செத்துப் போ' என்று பொதுவெளியில் கூறும் அரசியல் தலைவர் மறுபக்கம். இவையெல்லாம் மகளிரை இழிவுபடுத்தும் செயலென்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெண்களின் சுதந்திரச் சிறகொடிக்கும் இதுபோன்ற கொடுமைகளை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழகத்தில் இப்படியென்றால் நாட்டின் தலைநகரிலும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து தலைவிரித்தாடுகின்றன. டெல்லியில் ரபியா சைஃபி என்ற இளம் பெண் காவலர், கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தொடரும் இதுபோன்ற கொடூரமான சம்பவங்களைத் துரிதமாக விசாரித்து, இதில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளுக்கும் மிக விரைவில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். காலத்திற்கேற்ற சட்டங்கள், சமூக விழிப்புணர்வின் மூலமாக இக்கொடுமைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமெனக் கண்டனக் குரலோடு கோருகிறோம்.
வீரம் எனப் பொருள்படும் ஆண்மை, மாதரை அடிமைப்படுத்தவோ அவர்களைச் சீரழிக்கவோ கொடுக்கப்படும் உரிமைப் பத்திரம் அல்ல என்பதை ஒவ்வொரு ஆணும் உணர வேண்டும். கருவிலேயே சிதைக்கப்படும் கொடுமைக்கு எதிராகப் போராடிப் பிறந்து, இறப்புவரை எண்ணற்ற தடைகளை எதிர்கொண்டு வாழும் மரியாதைக்குரிய மகளிரின் கண்ணியம் காக்கப்பட, உரிமைகள் வென்றெடுக்கப்பட மக்கள் நீதி மய்யம் என்றும் குரல் கொடுக்கும்’’.
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT