Published : 07 Sep 2021 02:01 PM
Last Updated : 07 Sep 2021 02:01 PM

பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் நிறைவேற்றுவார்: ஜாக்டோ - ஜியோ நம்பிக்கை 

சென்னை

பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக முதல்வர் நிறைவேற்றுவார் என்று நம்புவதாக ஜாக்டோ - ஜியோ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''இன்றைய தினம் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் தொடர்பாக 13 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவரின் அறிவிப்புகளுக்கு ஜாக்டோ - ஜியோ நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு என்றைக்குமே அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையேயான நல்லுறவைப் பேணிப் பாதுகாக்கும் என்பதனை நிரூபிக்கும் விதமாக அறிவிப்புகள் அமைந்துள்ளன.

2017 முதல் 2019 வரையிலான போராட்டக் காலம் அனைத்தும் பணிக்காலமாக வரன்முறை செய்யப்படும், ஒழுங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பதவி உயர்வு மீண்டும் வழங்கப்படும், பழிவாங்கலால் செய்யப்பட்ட பணி மாறுதல் ரத்து செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் தமிழக முதல்வர் போராட்டக் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை எள்ளளவும் மாற்றாமல் நிறைவேற்றி உள்ளார் என்பதனைக் காட்டுகிறது.

தமிழக முதல்வர் தனது 110 உரையை, "மக்களாட்சித் தத்துவத்தின் நான்கு தூண்களின் ஒன்றான நிர்வாகத்தின் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களது நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக, நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றும்" என்று நிறைவு செய்துள்ளார்.

இது, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் பிரதான கோரிக்கையான மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது''.

இவ்வாறு ஜாக்டோ - ஜியோ தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x