Published : 07 Sep 2021 12:47 PM
Last Updated : 07 Sep 2021 12:47 PM
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது ஏன் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடக் கூடாது, ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்கக் கூடாது, வீடுகளில் மட்டுமே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராகச் சென்று வழிபட்ட விநாயகர் சிலைகளைக் கரைக்கவும், கோயில்களின் சுற்றுப்புறத்திலும் வெளிப்புறத்திலும் சிலைகளை வைத்துவிட்டுச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.
இந்தக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என, தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் ஏற்கெனவே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளித்திருந்தார்.
மேலும், சிறிய கோயில்களின் முன் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று (செப். 07) சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், விநாயகர் சதுர்த்திக்கு விதித்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு, பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
"ஓணம், பக்ரீத் பண்டிகைக்கு அளித்த தளர்வுகளால் கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்ததைக் கவனத்தில் கொண்டே, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்று முழுமையாகக் கட்டுக்குள் வராததால் மக்களைப் பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆங்காங்கே ஒருசில இடங்களில் தொற்று அதிகரிப்பதும், குறைவதுமாக இருக்கிறது.
பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடுவதற்குத்தான் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தனிநபர் தங்கள் வீடுகளில் வழிபடக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. யாரும் இந்தக் கட்டுப்பாடுகளைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT