Published : 07 Sep 2021 12:24 PM
Last Updated : 07 Sep 2021 12:24 PM
மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் உள்ளிட்டோருக்கு திருவுருவச் சிலைகள் அமைக்கப்படும் என, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (செப். 07) செய்தித்துறை (செய்தி மற்றும் விளம்பரம்) மானியக் கோரிக்கையின்போது, அத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், விடுதலைக்காகப் போராடிய தியாகிகள், மொழிப்போர்த் தியாகிகள், தலைசிறந்த இலக்கியப் படைப்பாளிகள், சமூக நீதிக்காகப் போராடியவர்கள், குடியரசு முன்னாள் தலைவர், திராவிட இயக்க முன்னோடிகள் ஆகியோரைப் போற்றும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருவுருவச் சிலைகள் நிறுவப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.
அதன் விவரம்:
'' * வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திருவுருவச் சிலை
* மருது சகோதரர்களுக்கு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திருவுருவச் சிலை
* சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்குக் கடலூரில் திருவுருவச் சிலை
* மொழிப்போர்த் தியாகி கீழபழுவூர் சின்னசாமிக்கு அரியலூர் மாவட்டம் கீழபழுவூரில் திருவுருவச் சிலை
* ஏ.பி.ஜெ.அப்துல் கலாமுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திருவுருவச் சிலை
* வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் திருவுருவச் சிலை
* முன்னாள் நிதி அமைச்சர் இரா.நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் திருவுருவச் சிலை
* சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையில் திருவுருவச் சிலை
* முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு புதுக்கோட்டையில் திருவுருவச் சிலை
* தமிழறிஞர் மு.வரதராசனாருக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருவுருவச் சிலை
என மேற்சொன்ன தலைவர்களுக்குத் திருவுருவச் சிலைகள் நிறுவ ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்''.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT