Last Updated : 07 Sep, 2021 03:13 AM

 

Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM

எவ்வித மாற்றமுமின்றி செயல்படுத்த முதல்வர் உத்தரவு; அத்திக்கடவு - அவிநாசி திட்ட பணிகள் 85% நிறைவு: ஜனவரியில் வெள்ளோட்டம் விட முடிவு

போலநாயக்கன்பாளையத்தில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறும் நீருந்து நிலையம்.

கோவை

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் அப்போதைய முதல்வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.1756.88 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு - அவிநாசி பாசனம், நிலத்தடி நீர் செறிவு மற்றும் குடிநீர் வழங்கும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழே 200 மீட்டர் தொலைவில், பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சி பகுதிகளில் உள்ள 1045 குளம், குட்டைகளுக்கு முதற்கட்டமாக நீர் நிரப்பும் வகையில் திட்டமிடப் பட்டுள்ளது. இதன்மூலம் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 50 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 3 மாவட்டங்களிலும் நீர்நிலைகளை இணைக்கும் வகையில் குழாய் பதிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மொத்தமாக 1058 கி.மீ. தூரத்துக்கு குழாய் பதிக்கப்படுகிறது. பிரதான குழாய் 105 கி.மீ. தூரத்துக்கும், கிளை குழாய்கள் 953 கி.மீ. தூரத்துக்கும் பதிக்கப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் பவானி, நல்லகவுண்டம்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளை யம், எம்மாம்பூண்டி, கோவை மாவட்டத்தில் அன்னூர் ஆகிய 6 இடங்களில் மிகப்பெரும் நீருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் முதல் 3 நீருந்து நிலையங்களின் பணிகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி நீருந்து நிலைய பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன.

திட்டத்தில் மாற்றம்?

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இத்திட்டத்தில் மேலும் சில குளம், குட்டைகளை சேர்க்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்பரவியது.

இதுகுறித்து திட்டத்துக்கான கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

கரோனா தொற்று பரவலால் பணியாளர்களில் 800 பேர் ஒடிசா, சத்தீஸ்கர், பிஹார், மேற்குவங்கம் உள்ளிட்ட தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்றதால் பணிகள் சுணக்கம் அடைந்தன. தற்போது 1050 தொழிலாளர்களுடன் பணிகள்வேகமாக நடைபெற்று வருகின்றன. திட்டத்தில் 85 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டன.

முதல்வர் முழு சம்மதம்

நீருந்து நிலைய பணிகள் அனைத்தும் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. அன்னூர் குன்னத்தூராம்பாளையத்தில் மட்டும் நீருந்து நிலைய பணி கட்டுமான அளவில் உள்ளது. விரைவாக இயந்திரங்கள் பொருத்துதல், குழாய் இணைப்பு உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகளை அங்கு தொடங்கவுள்ளோம்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தின் முழு விவரங்களை கடந்த வாரம் கேட்டறிந்தார். பணிகள்சிறப்பாக நடைபெறுகிறது எனக்கூறி, திட்டத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளாமல் திட்ட மிட்டபடி நிறைவேற்ற அறிவுறுத்தியுள்ளார். திட்டத்துக்கான முழுநிதியும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நீர்வளத் துறை அமைச்சர்துரைமுருகன் வாரந்தோறும் திட்டத்தின் நிலவரம் குறித்து கேட்டறிந்து வருகிறார். வரும் டிசம்பர் மாதத்துக்குள் பணிகளை முழுவதுமாக முடித்து, 2022 ஜனவரியில் வெள்ளோட்டம் நடத்த திட்டமிட்டுள் ளோம். 50 ஆண்டுகளுக்கும் மேல் பொறுத்துக் கொண்ட விவசாயிகள் திட்டத்தின் பலனை அனுபவிக்க இன்னும் சில மாதங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் புதிதாக மாற்றங்களை மேற்கொள்வது எளிதானவிஷயம் இல்லை எனக் கூறும் அதிகாரிகள், புதிதாக குளம், குட்டைகளை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்ப்பதற்காக ஈரோட்டில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x