Published : 06 Sep 2021 06:34 PM
Last Updated : 06 Sep 2021 06:34 PM
கோவை மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவல் இல்லை என, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. கரோனா தொற்றால் தினமும் சராசரியாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், நிபா வைரஸ் பரவலின் தாக்கமும் கேரளாவில் உள்ளது.
கேரளாவுக்கு அருகில் தமிழகத்தின் கோவை மாவட்டம் உள்ளது. கோவையில் இருந்து கேரளாவுக்கு சென்று வருவதற்கு வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட வழித்தடங்கள் முக்கியமானதாக உள்ளன. இந்த சாலைகள் வழியாக தினமும் ஏராளாமானோர் கோவைக்கு வந்து செல்கின்றனர்.
கேரளாவில் இருந்து கோவைக்கு வருபவர்கள் இ-பதிவு, கரோனா நெகட்டிவ் சான்று அல்லது கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், வாளையாறு சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இன்று (செப். 06) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு
அதன் பின்னர், ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"அரசு வழிகாட்டுதலின் படி, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், கோவையில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளது. கேரளாவில் இருந்து கோவைக்குள் வருபவர்களில், சான்றிதழ்கள் இல்லாதவர்களிடம் மாவட்ட எல்லையிலேயே கரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர், உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் அறிகுறி பரிசோதனையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், நிபா வைரஸ் பரவி வருவதாலும் கேரளாவின் எல்லைப் பகுதிகளான கோவை மாவட்டத்தின் வாளையாறு, முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைக்கட்டி உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் சுகாதாரம், வருவாய், காவல்துறையினரைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், அங்கிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் வாயிலாக தொற்றுப் பரவ வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கையாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும், பரிசோதனை செய்ததில், யாருக்கும் தொற்று பரவல் ஏற்படவில்லை.
யாருக்கும் தொற்றின் அறிகுறிகள் இல்லாத போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவல் இல்லை.
கோவையில் 50 கிலோ லிட்டராக இருந்த திரவ ஆக்சிஜன் கொள்ளளவு, 83 கிலோ லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி அளவும் உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் அறிகுறி இருப்பவர்கள் தயங்காமல் வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் கரோனா 3-வது அலை வராமல் தடுக்கவும், தற்போது உள்ள தொற்றின் அளவை மேலும் குறைக்க தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிபா வைரஸ் எவ்வாறு மனிதர்களை தாக்கி, அவர்களின் நரம்பு மண்டலங்களை எந்தளவுக்கு பாதிக்கிறது என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்கின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு, அதிகளவிலான வெப்ப நிலை இருந்தால், அவர்களுக்கு டெங்கு, நிபா, கரோனா உள்ளிட்ட தொற்றுகளின் அறிகுறிகள் உள்ளதா என முதலில் பரிசோதிக்கப்படுகிறது. மக்கள் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்".
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT