Published : 06 Sep 2021 04:27 PM
Last Updated : 06 Sep 2021 04:27 PM
இழந்த வாழ்வாதாரத்தை மீட்க ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள சாமிநத்தம், புதூர் பாண்டியாபுரம், மடத்தூர், சில்வர்புரம், பாலையாபுரம், சுப்பிரமணியபுரம் மற்றும் தூத்துக்குடி மாதா கோயில் பகுதி, பாத்திமா நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்று தனித்தனியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’எங்கள் பகுதியைச் சேர்ந்த பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஸ்டெர்லைட் ஆலையில் வேலைவாய்ப்பு பெற்று வந்தோம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆலை மூடப்பட்டுள்ளதால் நாங்கள் வெளியூர் சென்று வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அங்கேயும் எங்களுக்குப் போதிய ஊதியம் கிடைக்காததால் வறுமையில் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
அதுமட்டுமில்லாமல் ஸ்டெர்லைட் நிறுவனம் எங்கள் பகுதி மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தது. குறிப்பாக எங்கள் பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக அந்த மருத்துவ முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும், திருமண உதவித் தொகை, பெண்களுக்கு வேலைவாய்ப்பு, இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கோயில்களைப் புனரமைக்க நிதியுதவி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் செய்து வந்தது.
சிலரது தவறான நடவடிக்கைகள், கருத்துகளால் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் நாங்கள் மீண்டு வருவதற்கு அதிக காலம் பிடிக்கும். எனவே, இழந்த எங்கள் வாழ்வாதாரத்தை மீட்க ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். மேலும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களைத் தொடர்ந்து செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT