Published : 06 Sep 2021 04:05 PM
Last Updated : 06 Sep 2021 04:05 PM

மோடி அரசின் முதல் மரியாதை விவசாயிகளுக்குத்தான்: அண்ணாமலை பெருமிதம்

தருமபுரி

பாஜக தலைமையிலான மோடி அரசின் முதல் மரியாதை விவசாயிகளுக்குத்தான் என்று தருமபுரியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்தார்.

தருமபுரியில் பாஜக மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் இன்று (செப்.6) நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தருமபுரிக்கு வருகை தந்தார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:

''விவசாயிகள் தங்களின் அதீத உழைப்பால் தேய்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாகவே புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்தச் சட்டங்களை எதிர்க்கின்ற தலைவர்கள் யாரும் விவசாயத்தில் நேரடியாக ஈடுபடுவதில்லை. இடைத்தரகர்களால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளைக் காப்பாற்றவே புதிய வேளாண் சட்டங்கள். இந்தச் சட்டம் எந்த விவசாயிக்கும் எதிரானது அல்ல. இதன் பயன்கள் குறித்து பாஜக சார்பில் விரைவில் விவசாயிகளைச் சந்தித்து எடுத்துரைக்க உள்ளோம். பாஜக தலைமையிலான மோடி அரசின் முதல் மரியாதை விவசாயிகளுக்குத்தான்.

தனியார் மயமாக்கல்

தனியார் மயத்தைப் பலரும் எதிர்க்கின்றனர். 70 ஆண்டு கால வரலாற்றில் மத்திய அரசின் பல அலுவலகங்கள் அல்லது அலுவலகத்தின் ஒரு பகுதி அல்லது இயந்திரங்கள் பயன்பாடின்றிக் கிடக்கின்றன. இதைக் குத்தகை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் வழங்கி செயல்படச் செய்யவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம், அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். இந்தத் தொகை நாட்டின் ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டுக்கு, தரமான சாலை வசதிக்கு என, திட்டங்களை நிறைவேற்றவே பயன்படுத்தப்படும்.

உண்மை நிலை இப்படியிருக்க, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதாகத் தவறான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. எரிபொருள் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால், எவ்விதக் காரணமுமே இல்லாமல் எதிர்க்கட்சிகள் வரும் 20-ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, தமிழக விவசாயிகளின் வயிற்றில் கை வைக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். இதை பாஜக அனுமதிக்காது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாகத் தமிழக அரசு வெளியிடும் அறிவிப்புகள் நமது சம்பிரதாயங்களை அழிக்கும். வாழ்க்கை முறையில் கை வைக்கும் வேலை. விழா நாளில் வீட்டின் முன்பு அனைவரும் விநாயகர் சிலை வைத்துக் கொண்டாடுவோம்’’.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x