Published : 06 Sep 2021 02:31 PM
Last Updated : 06 Sep 2021 02:31 PM
விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட உரிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழக அரசு, கடந்த ஆண்டைப் போலவே கோயில்கள் முன் வைக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளது.
கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, விநாயகர் சிலை ஊர்வலங்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்குத் தமிழக அரசு தடை விதித்து இருந்தது. வீடுகளில் சிலைகள் வைத்து வழிபட்டுக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், இந்து முன்னேற்றக் கழக திருப்பூர் தலைவர் கோபிநாத் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று (செப். 06) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு தலைமையிலான முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு தடை விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டைப் போலவே சிறிய கோயில்களின் முன்பு வைக்கப்படும் சிலைகளை, இந்து சமய அறநிலையத்துறை எடுத்து, நீர்நிலைகளில் கரைக்கும் என்று தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT