Published : 06 Sep 2021 03:15 AM
Last Updated : 06 Sep 2021 03:15 AM
காந்தி மியூசியத்தை புது பொலிவு படுத்த தமிழக அரசு ஒதுக்கிய ரூ.6 கோடியில், அதன் வளாகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமனால் திறந்து பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்ட குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா மீண்டும் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், சென்னை, வேலூர், கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 5 இடங்களில் அறிவியல் பூங்காக் கள் உள்ளன.
மதுரையில் கடந்த காலத்தில் 4 இடங்களில் குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா இருந்துள்ளது. காந்தி மியூசிய வளாகத்தில் கடந்த 1995-ல் அறிவியல் பூங்காவை முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் திறந்து வைத்தார். தற்போது அந்த இடத்தில் பூங்கா இருந்ததற்கான எந்தச் சுவடும் காணப்படவில்லை.
ராஜாஜி பூங்காவில் அறிவியல் பூங்காவை முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி திறந்து வைத்தார். ஆனால், திறந்த வேகத்தில் இந்த பூங்கா முடங்கியது. அந்த பூங்கா இருந்த இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் தற்போது மண்டபம் கட்டியுள்ளது.
அதுபோல், சமுதாயக் கல்லூரி அருகே ஒரு அறிவியல் பூங்கா இருந்தது. அது இருந்ததற் கான அறிகுறியே தற்போது அங்கு இல்லை. காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்த பூங்காவும் சரியான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. திருப்பரங் குன்றம் சுற்றுச்சூழல் பூங்காவிலும் குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா இருந்தது. தற்போது அது சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப் பட்டு விட்டது. மதுரையில் இருந்த அறிவியல் பூங்காக்கள் மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்த பணியாளர்கள், சென்னை, திருச்சி அறிவியல் பூங்காக்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டனர்.
மதுரையில் பல நூறு கோடி ரூபாயில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், குழந்தைகளுக்கான அறிவியல் பூங்காக்களை அமைக்க உள்ளூர் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆர்வம் காட்டவில்லை.
கடந்த ஆண்டு புதிய பஸ் நிலையம் அருகே ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில், மற்றொரு அறிவியல் பூங்கா அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அது செயல்வடிவம் பெறவில்லை. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் மதுரையில் அறிவியல் பூங்கா அமைக்க தயாராக இருந்தும், அதற்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.10 கோடி ஒதுக்க முன்வந்தபோதும் அதிகாரிகள் இடம் வழங்கவில்லை. அதேநேரம் கன்னியா குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடம் ஒதுக்கிவிட்டனர்.
மதுரை காந்தி மியூசியத்தை மேம்படுத்த ஒதுக்கியுள்ள ரூ.6 கோடியில் அந்த வளாகத்தில் குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT